“பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும்” - வைக்கம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: ”வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம். உயர்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி, ஏழை - பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கேரளாவின் வைக்கத்தில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா”-வில், புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ - எந்த வைக்கம் நகரில் கைது செய்யப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடந்த ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் வெற்றி, திராவிட இயக்கத்தின் வெற்றி. அந்த வகையில் சமூக நீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். தமிழத்தின் முதல்வர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள், தோள்சீலைப் போராட்டத்தோடு 200-ஆவது ஆண்டு விழா நாகர்கோயிலில் நடந்தது. நானும், பினராயி விஜயனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, என்னையும் அழைத்திருந்தார் முதல்வர் பினராயி விஜயன்.

இப்போது எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார். இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடியவர் பினராயி விஜயன், பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியை தந்தது முதல் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கிய இந்த வைக்கம் போராட்டம், மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகுத்த போராட்டம். மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய சமூக கொடுமையை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டத்தில், வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதானார்கள். இங்கிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அந்தக் கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் ஏப்ரல் 13-ஆம் நாள் இங்கு வந்தார். ஏதோ ஒருநாள் வந்துவிட்டு, அடையாளப் போராட்டம் நடத்திக் கொண்டு பெரியார் திரும்பிப் போகவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார். இரண்டு முறை அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள். அந்த சிறைவாசத்தில், அரசியல் கைதிகளுக்கான மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதை கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவ மேனன் “பந்தனத்தில் நின்னு” என்ற புத்தகத்தில் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகள், பெரியாரைப் பற்றி எழுதி இருக்கிறார். “திருவாங்கூர் கவர்ன்மெண்டார் குரூர் நீலகண்டன் நம்பூதிரியைச் சிறையினின்று விடுவித்து விட்டார்கள் என்பதையும், ஈ.வி.ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதையும் கேட்க வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்" என்று 'யங் இந்தியா' பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார். இப்படி, இறுதிவரைக்கும் போராடினார் தந்தை பெரியார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காந்தியடிகளோடு இருக்கிறார் பெரியார்.

பெரியாரிடம் ஆலோசனை செய்துவிட்டுதான் திருவிதாங்கூர் ராணியை காந்தியடிகள் சந்திக்கிறார். கோயிலின் மூன்று பக்கம் முதலில் திறந்து விடப்படுகிறது. இது தொடர்பான வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு பெரியார் தலைமை தாங்குகிறார்.

வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925-ல் நடந்தபோது, அதில் கலந்துகொள்ள பெரியாருக்கும், நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை வகிக்கச் சொன்னார்கள். தலைமை வகிக்க மறுத்து, அதற்குப் பிறகு தந்தை பெரியார் வாழ்த்திப் பேசினார். ''உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையை பிடித்து அழைத்துக் கொண்டு செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்திற்கு ஏற்பட்ட மகிமை என்று தந்தை பெரியார் பேசினார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக போராட்டம் நடத்தியிருந்தால்கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்” என்று பேசினார் தந்தை பெரியார்.

வைக்கம் போராட்டத்தில் வெற்றிகண்ட தந்தை பெரியாரை அனைவரும் பாராட்டினார்கள். இதையெல்லாம்விட புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியது மிக முக்கியமானது. “இந்தச் சமூக அமைப்புக்கு எதிராக, தீண்டத்தகாத மக்கள் பொதுச் சாலையைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற 1924-ல் திருவிதாங்கூர் மாநிலத்தில் எடுத்த முயற்சி மிக முக்கியமானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகுதான் ‘மகத்’ போராட்டத்தை தொடங்கினார் புரட்சியாளர் அம்பேத்கர். ''ராமசாமி நாயக்கர் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். தன் சிந்தனையிலும், செயலிலும் காந்தியத்தை கொண்டிருந்தாலும், சமூக மாற்றமே இந்தியாவுக்கு முதன்மையானது என்று உறுதியாக நம்புகிறவர்" என்று 1928-ஆம் ஆண்டு பாராட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

‘வைக்கம் போராட்டம்’ என்பது, கேரளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி. அமராவதி கோயில் நுழைவு, பார்வதி கோயில் நுழைவு, நாசிக்-இல் இருக்கும் காலாராம் கோயில் நுழைவு போன்றவற்றிற்கு புரட்சியாளர் அம்பேத்கர் முயற்சிகள் காரணம் என்றால், தமிழ்நாட்டில் சுசீந்திரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், மயிலாடுதுறை கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுக்கு தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும்தான் காரணம்.

ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929-ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழ்நாட்டின் பல கோயில்களுக்குள் சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் நுழைய முடிவு செய்தார்கள். இந்த நிலையில்தான், 1939-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, 'கோயிலுக்குள் வருகிறவர்கள் அனைவரையும் அரசு பாதுகாக்கும்' என்று உத்தரவாதம் பெறப்பட்டது.

கேரள சமூகச் சீர்திருத்தவாதிகளான டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் பல்ப்பு பத்மநாபன் போன்றவர்களும், தமிழ்நாட்டு சமூகச் சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, தங்கப்பெருமாள், நாகம்மாள், கண்ணம்மாள் போன்றோரும் ஒன்றாக சேர்ந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம். தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர்கள் பட்டியல் மிக நீளமானது. தமிழ்நாட்டில் இதற்காக நிதி கொடுத்தவர்கள் அதிகம்.

சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு வைக்கம் போராட்டம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது சமூகரீதியாகவும், அரசியல்வழியிலும், பொருளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உயர்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி, ஏழை – பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும். நவீன வளர்ச்சியால் இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மனமாற்றமும் நிச்சயம் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும்.

பகுத்தறிவு சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், ஸ்ரீ நாராயணகுரு, மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல் மார்க்ஸ் போன்றர்களின் கருத்துகளும் உழைப்பும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும்.

அதற்காகத்தான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையை அரசியல் கொள்கையாக மட்டுமல்ல, ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசில் அறிவித்திருக்கிறோம். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்தப் போராளிகளை போற்றுவதற்காக மட்டுமல்ல, அவர்கள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய கடமையில் முன்னேறிச்செல்ல. வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம். அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம். எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம். கொண்ட கொள்கையில் வெல்வோம். ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்” என்று அவர் அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்