சென்னை: "நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாட்களுக்கு மட்டும் தான் பேரவைக் கூடியிருக்கிறது. அதிக நாட்களுக்கு அவைக் கூட்டம் நடைபெற்றால் தாங்கள் அதிக அளவில் அம்பலப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு அவையை திமுக அரசு நடத்துகிறது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.
அதேபோல், நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாட்களுக்கு மட்டும் தான் பேரவைக் கூடியிருக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் மிகக்குறைந்த நாட்களுக்கு சட்டப்பேரவை நடைபெற்ற ஆண்டும் இது தான். அதிலும், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்ட 3 நாட்களையும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தியின் மறைவு மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்ட நாளையும் கழித்து விட்டால், மொத்தம் 14 நாட்கள் மட்டும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாட்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளது.
தமிழக அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன. அவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது வெறும் 8 நாட்களில் விவாதம் நடத்தப்பட்டால், அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? ஆண்டுக்கு வெறும் 14 நாட்கள் மட்டுமே விவாதம் நடத்தப்பட்டால் 234 தொகுதிகளின் உறுப்பினர்களும் தங்கள் தொகுதியின் பிரச்சினைகள் குறித்து எந்த அளவுக்கு பேச முடியும் என்ற அக்கறை திமுக அரசுக்கு சிறிதும் கிடையாது. அதிக நாட்களுக்கு அவைக் கூட்டம் நடைபெற்றால் தாங்கள் அதிக அளவில் அம்பலப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு அவையை நடத்துகிறது.
» தடைகளை தகர்த்தெறியும் புன்னைநல்லூர் கோதண்டராமர்
» தென் திருவாரூர் என்று போற்றப்படும் இடைகால் தியாகராஜர் கோயில்
பேரவைக் கூட்டங்களை மிகக்குறைந்த நாட்களுக்கு மட்டுமே நடத்துவது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு புதிதல்ல. 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசு, 2021-ம் ஆண்டில் 27 நாட்கள், 2022-ம் ஆண்டில் 34 நாட்கள், 2023-ம் ஆண்டில் 29 நாட்கள் மட்டுமே அவை நடந்திருக்கிறது. ஆண்டுக்கு 100 நாட்கள் அவையை நடத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில். மொத்தமாக நான்காண்டுகளில் சேர்த்தும் கூட 108 நாட்களுக்கு மட்டும் தான் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
அதாவது நான்காண்டுகளில் மொத்தம் 400 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டிய அவையை, அதில் 27% அளவுக்கு மட்டுமே நடத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. உறுதியளிக்கப்பட்டதில், நான்கில் மூன்று பங்கு நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த மறுப்பதன் மூலம் ஜனநாயகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது. இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளும், ஆட்சியாளர்களின் மீதான குற்றச்சாட்டுகளும் விவாதிக்கப்படுவதை திமுக அரசு தடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சில துறைகளைத் தவிர, மற்றத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது ஒரு நாளைக்கு ஒரு மானியக் கோரிக்கை என்ற அளவில் விவாதம் நடைபெறும். ஒரே அமைச்சரிடம் இரு பெரிய துறைகள் இருந்தால், அவர் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இரு நாட்கள் விவாதம் நடக்கும். உள்துறை மானியக் கோரிக்கை மீது இரு நாட்களுக்கு விவாதம் நடைபெறும். பின்னர், இந்த வழக்கம் ஓர் அமைச்சரின் துறைகளுக்கு ஒரு நாள் என்ற அளவில் சுருங்கியது. ஆனால், நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 துறைகளின் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து, அதில் சராசரியாக 7 பேரைக் கூட பேச விடாமல் விவாதம் நடத்தும் அளவுக்கு பேரவை அலுவல் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 375-ஆம் வாக்குறுதியாக நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் கூட்ட நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதைப் போன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. வினா-விடை நேரம் மட்டுமே முழுமையாக நேரலை செய்யப்படும் நிலையில், மற்ற தருணங்களில் ஆளுங்கட்சியினரின் உரைகளும், அவர்களை புகழ்ந்து பாடுபவர்களின் உரைகளும் மட்டும் தான் நேரலை செய்யப்படுகின்றன. அரசுக்கு எதிராக எவரேனும் பேசினால் உடனடியாக நேரலை ரத்து செய்யப்படுகிறது. எதிர்க் கட்சிகளைக் கண்டு ஆளுங்கட்சி ஏன் இந்த அளவுக்கு அஞ்சி நடுங்குகிறது என்பது தெரியவில்லை.
சட்டப்பேரவைகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள். அங்கிருந்து தான் ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், நாற்றங்கால்களையே கருகச் செய்து ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத் தான் திமுக அரசு செய்கிறது. அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான தண்டனையை அவர்கள் தருவார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago