திமுக இலக்கணப்படி, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான க.செல்வராஜும் மகன் திலகராஜை தனது அரசியல் வாரிசாக்கி மாணவரணி அமைப்பாளர் பதவியில் அமர்த்தியிருக்கிறார். இதுதான் திருப்பூர் திமுகவில் இப்போது ஹாட்டாபிக் திமுக பவர் சென்டருடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர் க.செல்வராஜ். மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் துவங்கி, திக தலைவர் கி.வீரமணி, ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை என பலருடனும் நெருக்கம் பாராட்டி வரும் செல்வராஜ், அமைச்சர் நேருவிடம் செல்லப்பிள்ளை கணக்காய் இருப்பவர்.
அப்படிப்பட்டவர், தனது மகன் திலகராஜை இளைஞரணி பதவியில் நியமிக்க வைத்து அதன் மூலம் அவரை உதயநிதிக்கு நெருக்கமான வட்டத்துக்குள் திணிக்க திட்டமிட்டார். அது முடியாமல் போனதால் தொலைநோக்குத் திட்டத்துடன் மாணவரணி பொறுப்பில் உட்காரவைத்திருக்கிறார். இதுகுறித்து பேசும் திருப்பூர் திமுகவினர், “திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருப்பதால் தனது மகன் திலகராஜை தனக்குக் கீழே இளைஞரணி பொறுப்பில் அமர்த்திவிட வேண்டும் என அறிவாலயத்தில் முட்டி மோதினார் செல்வராஜ்.
ஆனால், வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான தங்கராஜ் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்பதால் செல்வராஜால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமாரும், உதயநிதிக்கு நெருக்கமாக இருப்பதால் அவரும் எதிர்காலத்தில் தனது அரசியல் வளர்ச்சிக்கு யாரும் தடையாக வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். இத்தனை சிக்கல்கள் இருப்பதால் செல்வராஜால், தான் நினைத்தபடி மகனை இளைஞரணி பொறுப்புக்கு கொண்டுவர முடியவில்லை.
இருந்த போதும் திலகராஜுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் பதவியை போராடி பெற்றுவிட்டார். தான் நினைத்த பதவி தனது மகனுக்கு கிடைக்கவில்லை என்றபோதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத செல்வராஜ், மாணவரணி பொறுப்பேற்று திருப்பூருக்கு திரும்பிய மகனுக்கு மேள தாளம் முழங்க தனது ஆதரவாளர்களை வைத்து வரவேற்பு கொடுக்க வைத்தார்” என்கிறார்கள்.
திமுகவில் வருங்காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியை மீண்டும் தனக்காக கேட்பார் செல்வராஜ். கடந்த முறையே மார்க்சிஸ்ட் கட்சிக்கு போகவேண்டிய இந்தத் தொகுதியை அமைச்சர் நேருவின் தயவில் தான் செல்வராஜ் தனக்காக பெற்று வந்ததாகச் சொல்வார்கள்.
இம்முறை தொகுதி தனக்குக் கிடைக்காவிட்டால் அந்த இடத்தில் தனது மகனை நிறுத்த கணக்குப் போடுகிறாராம் செல்வராஜ். அந்தக் கணக்கை வென்றெடுக்க அதற்கு முன்னதாக மகனை சின்னவரின் அருட்பார்வைக்குள் கொண்டு செல்ல துடிக்கிறாராம்.
அதற்காகவே இத்தனை அலப்பறைகள் ஆர்ப்பாட்டங்கள் என்கிறார்கள். முன்னதாக, ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த எண் கணித ஜோதிடப்படி திலக்ராஜ் என்ற தனது பெயரை திலகராஜ் என மாற்றிக் கொண்டிருக்கும் செல்வராஜின் மகனும், அப்பா தன்னை அரசியலில் உண்மையிலேயே ‘திலகராஜ்’ ஆக்குவார் என்ற நம்பிக்கையில் திருப்பூரை வலம் வருகிறார்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago