தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. எனவே, சுரங்கங்களைக் கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்டம் இயற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க, கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டப்படி, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. சில்லிமனைட்க்கு ரூ.7ஆயிரம், காரீயத்துக்கு ரூ.40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் இயற்கை எரிவாயு ஒரு கனமீட்டருக்கு ரூ.3.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலங்களின் உரிமையாளர் என்பவர், நிலத்துக்கான ஒருங்கிணைந்த உரிமம் அல்லது நில ஆய்வு உரிமம், கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்க குத்தகை அல்லது கல் சுரங்க குத்தகையின் உரிமையாளர் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ள நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட பிற கனிமத்துக்கு சலுகை வழங்கப்பட்டவர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியானது, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் நிலைக்கு குறையாத அலுவலரால் நிர்ணயிக்கப்பட வேண்டும். குறைவான வரியை செலுத்தி அதிகமான கனிமத்தை அனுப்பியிருந்தால், நிலுவை வரி அல்லது வரியின் மீதான 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவேக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "சிறிய கனிமங்களை கொண்ட நிலங்களுக்கு வரி விதித்தால், கட்டுமானப் பொருட்கள் விலை உயரும். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரினர்.
அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘ராயல்டி என்பது வரியல்ல என்றும், வரியைப் பெறுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. விற்பனை வரியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பாக வரிவிதிப்பின்போது பரிசீலிக்கப்படும்’’ என்றார். தொடர்ந்து, உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago