“டங்ஸ்டன் சுரங்க உரிமம் இறுதி செய்யப்படும் வரை அமைதி காத்த தமிழக அரசு” -  இபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “மத்திய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை அரசு அமைதியாக இருந்துள்ளது. மாநில அரசின் கோரிக்கையை மத்திய சுரங்கத்துறை நிராகரித்ததாக வந்த செய்தி மதுரை மாவட்ட மக்களுக்கு சென்றடைந்து அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டதால், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அரசின் தனித் தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் பேசினர்.

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுரங்கத்துறை உரிமம் வழங்கியதால், தமிழக முதல்வர் பிரதமருக்கு 20.11.2024 அன்று கடிதம் எழுதியதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அக்கடிதத்தில், 3.10.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஒரு கடிதம் எழுதியதாகவும், அதற்கு மத்திய அரசிடமிருந்து 2.11.2023 அன்று பதில் பெறப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்விரு கடிதத்தில் உள்ள முழு விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, சுரங்கம் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை 2023ம் ஆண்டு திருத்தச் சட்டம் 17.3.2023 ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் 2023 ஆண்டு செப்டம்பர் மாதமே கடிதம் அனுப்யிதாக தெரிகிறது. மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திருத்தச் சட்டத்தில், பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற 20 அரிய வகை கனிமங்கள், கிரிட்டிக்கல்ஸ் கனிமங்கள் என்று அறிவித்து அவைகளின் ஏல முறையை மத்திய சுரங்கத் துறையே செயல்படுத்தும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் மத்திய அரசு அதிமுக்கிய கனிமங்கள் பட்டியலில் டங்ஸ்டன் கொண்டு வரப்பட்டதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதமே எழுதியுள்ள கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருப்பது தெரியவருகிறது.

அப்படியென்றால், 3.10.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறைக்கு எழுதிய கடிதத்தில், இந்த அரசின் எதிர்ப்பை தெரிவித்துள்ளாரா? இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது திமுக எம்.பி.க்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் முழு அளவில் அழுத்தம் கொடுத்து அந்த சட்டத்திருத்தத்தை அங்கேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். அதை செய்ய இந்த அரசு தவறிவிட்டது. தமிழக மக்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது, அதை தடுத்து நிறுத்தும் நிலையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும். அந்தப் பணியை அவர்கள் செய்ய தவறிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசிடமிருந்து இந்த சட்டத்திருத்த முன்வடிவு மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டபோதே, தமிழக அரசு தனது எதிர்ப்பை திட்டவட்டமாக தெரிவித்தது. மாநில அரசின் உரிமையில் தலையிடுவதால், நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு மாநில அரசினுடைய ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அறுதிப் பெரும்பான்மையின் அடிப்படையில், அவர்கள் அந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்த சட்டத்திருத்த முன்வடிவுக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “மாநில உரிமைகள் பறிபோகிறபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு தகுந்த அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால், நிறைவேற்றப்பட்டது என்றால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தானே. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது, அதன் அடிப்படையில் மத்திய அரசு சுரங்க ஏலத்தை நடத்தியிருக்கிறது.

மேலும், மத்திய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டபோது, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை, அதாவது 7.11.2024 வரை, சுமார் 10 மாதங்கள் வரை இந்த அரசு அமைதியாக இருந்துள்ளது. பத்து மாத காலம் இடைவெளி இருந்துள்ளது. அதற்குள் அரசு தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்த அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒப்பந்தப்புள்ளி கோருவதை கைவிடுங்கள் என்று மாநில அரசு மத்திய அரசை கோரவில்லை என்று மத்திய சுரங்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

எனவே, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், தமிழக அரசு உரிய நேரத்தில் தங்களது கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவிக்காத காரணத்தால், இதுபோன்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 3.10.2023 அதாவது கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே, மத்திய அரசு மாநில அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், மாநில அரசின் கோரிக்கையை மத்திய சுரங்கத்துறை நிராகரித்தாதகவும் வந்த செய்தி மதுரை மாவட்ட மக்களுக்கு சென்றவுடன் அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் இறங்கினர். அதைத்தொடர்ந்து இந்த அரசு வேறு வழியின்றி, முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது, இந்த தனித் தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளது,” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்