“எங்களை திராவிடன் என்று சொல்லி கேவலப்படுத்துவதை விடவா சங்கி என்ற சொல் கேவலமாகி விட்டது?” - சீறும் சீமான் பேட்டி

By எஸ்.கோவிந்தராஜ்

கொள்கை பேசி இளைஞர்களை அரசியல் மயப்படுத்தி வருகிறீர்கள். அப்படி இருக்கையில் திரைக்கவர்ச்சி மூலம் நடிகர்கள் அதை கபளீகரம் செய்வது வேதனையாக இல்லையா? - எதையும் எதிர்த்து போரிட்டு, தூய கட்டமைப்பை ஏற்படுத்துவது தான் ஒவ்வொரு புரட்சியாளரின் கடமை. எதுவுமே இல்லாமல், கட்டமைப்பை கைப்பற்ற, நாங்கள் கருணாநிதியின் மகனோ, பேரனோ இல்லை. மாறுதல் என்பது ஒரு நொடியில் வராது. அதுபோல, திரைக் கவர்ச்சியையும் வீழ்த்தி, எழுந்து மேலே வரவேண்டிய தேவை உள்ளது.

அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற அந்தஸ்துக்கு வந்திருந்தாலும் எந்தப் பதவிக்கும் வரமுடியாவிட்டால் யாருக்குமே சோர்வு ஏற்படத்தானே செய்யும்? - எதற்கும் துணிந்த நேர்மையான இளைஞர்கள் ஒரு நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் அறுவடைக்கான நாளில்லை. விதைப்பதற்கான நாளாகவே கருதுகிறேன். நான் விதைத்ததில், 36 லட்சம் விதைகள் விளைந்திருக்கிறது. இவர்கள் ஆளுக்கு ஒரு விதை ஊன்றினால், அது 72 லட்சமாக மாறாதா?

இந்தியாவிலேயே 52 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கும் மாநிலம் தமிழகம் தான். இதைச் சாத்தியமாக்கியது திராவிடக் கட்சிகளின் ஆட்சி தானே? - தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள் தரமாக இருந்தால், ஏன் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர்? எந்த அமைச்சரின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றன? எந்த அமைச்சர், அதிகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்?தனியாரால் தரமான கல்வியை, மருத்துவத்தை கொடுக்க முடியும் என்றால், அதை செய்ய அரசால் ஏன் முடியவில்லை? 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், தலைநகரில் மழை வழிந்தோடும் ஒரு கால்வாயை வெட்ட முடியவில்லை. இவர்கள் என்ன ஆட்சி செய்து சாதித்துவிட்டார்கள் என்று பாராட்டச் சொல்கிறீர்கள்.

தமிழை தூக்கிப் பிடிக்கும் சீமானுக்கு பிறமொழி பேசுபவர்களின் வாக்குகள் கிடைக்குமா? - இந்த மண்ணுக்காக, மக்களுக்காக இவர் உண்மையிலேயே அக்கறையாக பேசுகிறார் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. எனவே, அவர்கள் என்னை பேரன்பு கொண்டு காதலிக்க வேண்டும். உலக உயிர்களுக்கான அரசியலை நாங்கள் செய்யும் போது, பக்கத்தில் இருக்கிற சக மனிதர்களை, பிற மொழி பேசுகிற மனிதர்களை வெறுப்போம் என்று பேசுவது எவ்வளவு கொடுமையானது. பிறமொழி பேசுபவர்களுக்கு தேர்தல் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளேன். திராவிடர்கள் தான், என்னை பிற மொழி பேசுபவர்களுக்கு எதிராக கட்டமைக்கிறார்கள். திமுக தான் அதனை கிளப்பி விடுகிறது.

திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அதிமுகவை விமர்சிப்பதில்லையே..? - மோதி எதிர்க்க வேண்டிய எதிரிகளோடு தான் மோதவேண்டும். முதன்மை எதிரியை அழித்துவிட்டால், இந்த எதிரிக்கு வேலை இல்லை. அதிமுக மோதி எதிர்க்க வேண்டிய எதிரியே இல்லை. அது தவறு செய்யும்போது சுட்டிக் காட்டுவோம்; நல்லது செய்யும்போது நன்றி சொல்லுவோம். அதோடு, அதிமுகவினர் நாங்கள் திராவிட மாடல் என்றோ திராவிடம் என்றோ பேசுவதில்லையே. அதிமுக ஆட்சியின் போது வாடகை வாய்களைக் கொண்டு, எங்கள் குடும்பப் பெண்கள் உட்பட பலரையும் தரக்குறைவாக விமர்சிக்கவில்லையே. இந்தக் கேவலம் எல்லாம் திமுக ஆட்சியில் தானே நடக்கிறது.

ரஜினியை சந்தித்த பின் ‘சங்கி’ என்றால் நண்பன் என்றும் பொருள்படும் என்று புதிய விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே..? - பாஜக அமைச்சரவையில் இருந்து பதவி சுகம் அனுபவித்த திமுகவினர், நான் ரஜினியைச் சந்தித்தால், சங்கி என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் மோடியை சந்தித்தபோது அவர்களை சங்கி என்று சொல்லவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரஜினியை அழைக்கும் போதும், அவரை வைத்து படம் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் போதும் அவர் சங்கியாகத் தெரியவில்லையா?

நாங்கள் இருவரும் சந்தித்ததில், திமுகவுக்கு ஒரு நடுக்கம் இருக்கிறது. அதனால் சங்கி என்று பேச வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் எனக்கு காவி உடை போட்டு, ரஜினியுடன் இருக்கும் படத்தை வெளியிடுகிறார்கள். இதை திட்டமிட்டு செய்வது திமுக தான். வேறு மரத்திற்கு காவி கட்டலாம். ஆனால், நான் வைரம் பாய்ந்த பனைமரம். எனக்கு காவி கட்ட முடியாது. துளசிதாசர் ராமாயணத்தை இந்தியில் எழுதும் போது, ராமனின் நண்பன் அனுமான் என்பதற்கு ‘சங்கி’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். சங்கி என்றால் தமிழில் நண்பன் என்ற ஒரு பொருள் இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக எங்களை திராவிடன் என்று சொல்லி கேவலப்படுத்துவதை விடவா, சங்கி என்ற சொல் கேவலமாகி விட்டது? ரஜினியின் மகள் சவுந்தர்யா, “என் அப்பாவை சங்கி என்று சொல்லாதீர்கள்” என்று முன்பு வருத்தப்பட்டபோதே, “சங்கி என்றால் நண்பன் என்று கூட ஒரு பொருள் உள்ளது. எனவே வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி இருக்கிறேன்.

நாதக மேடைகளில் தேசவிரோத கருத்துகளை பேசுவதாக சொல்லப்படுகிறதே..? - குஜராத்திலிருந்து ஒரு மீனவரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்த போது, இந்திய கடற்படை விரட்டிச் சென்று அவரை மீட்டு வந்தது. ஆனால், 850 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றபோது, தடுக்காமல் வேடிக்கை பார்த்ததும் இதே கடற்படைதான். தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் போது ஒருமுறையாவது இந்திய கடற்படை விரட்டிச் சென்று மீட்டிருக்கிறதா? எங்களை இந்திய மீனவர்களாக கருதாமல், தமிழக மீனவர்களாக கருதினால் நாட்டுப்பற்று எப்படி வரும்? அண்டை மாநிலங்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கின்றன.

இயற்கை பேரிடர்களின்போது கூட, மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதி கொடுக்க மறுக்கிறது. என் நாடு என்னை பாதுகாக்கும், எனக்கு ஒரு கஷ்டம் வந்தால் துணையாக நிற்கும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில் தேசப்பற்று எப்படி வரும்? இதனைக் கூட சரிசெய்வதற்காகத்தான் பட்டியலிடுகிறேன். இதனால், தேசப்பற்று இல்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. இந்த நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்ந்ததால், பாரத நாடு, பைந்தமிழர் நாடு என்பது தான் எங்கள் கொள்கை. இதில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே பாடத்திட்டம் என்பதை எல்லாம் ஏற்க முடியாது.

மத்திய அரசுக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலிப்பது போல் மற்ற மாநிலங்களில் ஒலிப்பதில்லையே..? - இந்தி, நீட், ஜிஎஸ்டி என மக்களைப் பாதிக்கும் விஷயங்களை முதலில் எதிர்த்தவர்கள் தமிழர்கள். தமிழ் மூத்த மொழி என்ற அடிப்படையில், எனக்கு அதிக நாட்டுப்பற்று இருப்பதால் தான், சண்டை போடுகிறோம். விடுதலைப் போராட்டத்தில் செக்கிழுத்த, தூக்கில் தொங்கியவர்களின் பேரன்களுக்கு நாட்டுப்பற்றை பற்றி சொல்லித் தர வேண்டியதில்லை.

தான் சார்ந்திருக்கும் நாட்டை விட, மதம் பெரிது என்று எண்ணி செயல்பாட்டால், நாடு சுக்குச் சுக்காகச் சிதறிவிடும் என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். இவர்கள், ஆண்டவனையும் ஒரு கட்சியின் சொத்தாக மாற்றி அரசியல் செய்வதை எப்படி ஏற்க முடியும்? ராமரை தலைவராகவும், பிள்ளையாரை பொதுச்செயலாளராகவும் ஆக்கிக் கொண்டு கட்சி நடத்தக்கூடாது.

அவர்களுக்கு (பாஜக) அந்த ‘ராம’சாமி. திராவிடர்களான இவர்களுக்கு இந்த ராமசாமி. இருவரிடமும் என்ன வேறுபாடு கண்டுவிட்டீர்கள்? எது ஒன்றையும், ஆழ்ந்து, தெளிந்து விமர்சியுங்கள் என்று சொன்ன பெரியாரையே இவர்கள் விமர்சிக்க விடுவதில்லை.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையாகி விட்டதே..? - கஸ்தூரி ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையே. அப்படியே இருந்தாலும் அவர் வருத்தம் தெரிவித்துவிட்ட பின்பும், தனிப்படை அமைத்து உடனே கைது செய்து சிறையில் தள்ளிவிட்டீர்களே. ஆனால், தேவேந்திரகுல வேளாளர்கள் குறித்து, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஓவியா, இழிவாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லையே. எங்களைப் பற்றி இழிவாகப் பேசுவது குறித்து புகார் கொடுத்தால் அதை ஏற்பதுகூட இல்லை.

நாதக பிரிவினைவாத இயக்கம் என்ற வருண்குமார் ஐபிஎஸ் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? - அதை வெறும் வெற்று குற்றச்சாட்டாக பார்க்கிறேன். ஏதோ ஒரு காழ்புணர்ச்சியில் யாரையோ மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இருக்கலாம். அதனால் அவர் அதை பேசுகிறார். அவர் பேசியதற்கு சட்டபூர்வமான சான்று இருக்கிறதா? தேசிய புலனாய்வு முகமையே எங்களை சோதித்து விட்டுச் சென்று விட்டனர்.

என் மொழியை நான் பேசுவதை பிரிவினைவாதம் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? எல்லோருக்கும் தாய் மொழி மேல் பற்று இருக்கும். எல்லா மாநிலத்தவருக்கும் இந்த மொழி உணர்வு இருக்கும். இவர்களையெல்லாம் பிரிவினைவாதிகள் என்று சொல்வதில்லை. தமிழர்களுக்கு நாதியில்லை அதனால் யார் வேண்டுமானாலும் பேசிவிட்டுச் செல்கிறார்கள்.

வருண் குமாரின் குற்றச்சாட்டு அபத்தமான குற்றச்சாட்டு. அதனை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரி மக்களுக்குத்தான் வேலை செய்ய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர் போல், அந்தக் கட்சி சரியில்லை, இந்தக் கட்சி சரியில்லை என்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இவர்களைப் போன்றவர்களை வைத்து ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களையும், கண்டிக்காத உயர் அதிகாரிகளையும் பாருங்கள்.

அவரைப் பேசவிட்டு ரசிக்கிறார்கள். நாங்கள் தமிழ், தமிழர் என்று பேசுவது பிரிவினைவாதம் என்றால் திராவிடம் என்று பேசுவது பக்கவாதமா? தெலுங்கு தேசம் என்ற ஒரு கட்சி ஆரம்பித்தபோது அது பிரிவினைவாதமாக தெரியவில்லையா? எத்தனை நாளைக்கு இதை பேசிக் கொண்டிருப்பார்கள் என்று பார்க்கத்தானே போறோம்...

2026 தேர்தலில் உங்களின் பிரதான பிரச்சாரம் என்னவாக இருக்கும்? - அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் தான். இதில் எல்லாம் அடங்கிவிடும். புதிய ஒரு தேசம் செய்வோம். மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். சிறு காற்றுக்கு உடைந்து விடும் முருங்கை மரம் அல்ல நாங்கள். 200 ஆண்டுகளானாலும் நின்று காய்த்து பலன் தரும் பனைமரம் போன்றவர்கள். | முந்தையப் பகுதி: “தம்பி விஜய்க்கு ஒரு சிக்கல் என்றால் நான் தான் முதலில் நிற்பேன்!” - சீமான் சீரியஸ் நேர்காணல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்