நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி மாவட்ட எஸ்பி-யான வருண்குமாருக்கும் இடையிலான கருத்து மோதல் மீண்டும் கணகணக்க ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்திப் பேசியதாக புகார் வெடித்தது.
இது தொடர்பாக அவரை கைது செய்த திருச்சி போலீஸார், அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நாதக மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் குறித்து சீமான் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அப்போது இதன் பின்னணியில் திருச்சி எஸ்பி-யான வருண்குமார் இருப்பதாக சீமான் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இதையடுத்து, வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-யுமான வந்திதா பாண்டே ஆகியோரை அநாகரிகமாக விமரிசித்து நாதகவினர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
இவர்களுக்கு வருண்குமார் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிலடி கொடுத்தார். மேலும், இவ்வாறு பதிவிடத் தூண்டியதாக சீமான் மீதும், மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக 22 பேர் மீதும் திருச்சி தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதில் இருவரை கைது செய்தனர். அத்துடன், சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிய வருண்குமார், தனது குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் நாதக-வினர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார்.
அத்தோடு இரு தரப்பினரும் அமைதியாகிவிட்ட நிலையில், இப்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அண்மையில் சண்டிகரில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் திறம்பட செயல்படும் நூற்றுக் கணக்கான போலீஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வருண்குமாரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்திருந்த உள்துறை அமைச்சகம், நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றுக்கு அவரைத் தலைமையேற்று சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விளக்கும்படியும் அறிவுறுத்தியிருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய வருண்குமார், சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியான தானும் தன்னுடைய குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம், நாம் தமிழர் என்ற கட்சி என்றும், இந்த கட்சியை சேர்ந்தவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும், அந்தக் கட்சியை கண்காணிக்க வேண்டும் எனவும் பேசினார்.
ஏற்கெனவே, என்ஐஏ உள்ளிட்ட தேசிய அமைப்புகளின் சோதனை வளையத்தில் இருக்கும் நாதக குறித்து, தேசிய அளவிலான ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பகிரங்கமாக வருண்குமார் ஐபிஎஸ் பேசியுள்ளதால், அந்த கட்சிக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ரொம்ப நாளாக அவர் (வருண்குமார்) எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி இந்திய அரசியலமைப்பின் படி பதிவுசெய்யப்பட்டு, 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தனித்து நின்று போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்ற கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என எந்த அடிப்படையில் கூறுகிறார்? அவருக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கிறதா? என்னை, என் குடும்பத்தினரை இழிவாக பேசியதற்கு வழக்குப் போடுவாரா? இந்த காக்கி உடையில் எத்தனை ஆண்டுகள் இருப்பார்? 30, 40 ஆண்டுகள் கழித்து இறங்கித்தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பார்த்துப் பேச வேண்டும். மோதுவோம் என்றாகிவிட்டது, வா மோதுவோம்” என சவால் விட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடாக்கி இருக்கிறது
இதுகுறித்து வருண்குமாரின் கருத்தை அறிய அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அடங்கிக் கிடந்த விவகாரம் மீண்டும் கணகணக்கத் தொடங்கி இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago