“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” - திமுக மீது விஜய் கடும் தாக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் செய்துவிடுவார்கள்’ என்று, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், நூலை வெளியிட்டு தவெக தலைவர் விஜய் பேசிய தாவது:இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், நம் நாட்டின் நிலைமையை நினைத்து பெருமைப்படுவாரா? வருத்தப்படுவாரா? நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும்.

அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்.14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் மத்தியில் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அதேபோல் இங்கே வேங்கை வயலில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு அமைந்தாலே போதும். அதனால் தினந்தோறும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வது, அறிக்கை விடுவது, நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வது, மழை தண்ணீரில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆட்சியாளர்கள் இறுமாப்பு: மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.

விசிக தலைவர் திருமாவளவனால் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமல் போய்விட்டது. அம்பேத்கரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் அவருக்கு இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் அவர் மனது இன்றைக்கு எங்களோடு தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.



மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்: முன்னதாக வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: பட்டியலினத்தவர் அல்லாத ஒருவர் அம்பேத்கர் குறித்த புத்தகம் வெளியிடுவதன் மூலம் திருமாவளவனின் கனவு நிறைவேறியுள்ளது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.

கொள்கை பேசிய கட்சிகள் இதுவரை அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை. 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் 1.40 கோடி தலித்கள் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை ஒரு தலித்கூட பொது தொகுதியில் நிற்க வைக்கப்படவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தைரியமாக கூற முடியவில்லை. தமிழகத்தின் ஊழலை, மதவாதத்தை விஜய் எடுத்து பேச வேண்டும்.

திராவிடம் என்பது அனைவரும் சமம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்கவேண்டும். இளைஞர்களுக் கான அரசியலை உருவாக்க வேண்டும். சாதியை அழிக்க வேண்டும். வேங்கை வாயல் கிராமத்துக்கு விஜய் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சட்டத்தில் 397 பிரிவுகள் உள்ளன. அதில் 15-வது பிரிவு மிகவும் முக்கியம். அதில் ‘‘மதத்தின் பெயரிலோ, சமயத்தின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ, நிலத்தின் பெயரிலோ, இவை எல்லாம் சேர்ந்த ஒரு கலவையின் பெயரிலோ இந்த அரசு யாரிடமும் வேறுபாடு காட்டாது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மனுநீதி புதைக்கப்பட்டது.

சமநீதி உறுதி செய்யப்பட்டது இவ்விழாவில் வெளியிடப் பட்டுள்ள புத்தகத்தை அனை வரும் படித்தால் தான் அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் சமநீதிகாக்கும் படை ஒன்று உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட அம்பேத்கரின் பேரனும், சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே பேசும்போது, ‘‘அம்பேத்கர் தலித் மக்களுக்கான தலைவர் மட்டுமல்ல. அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவர். அனைத்து மக்களின் உயர்வுக்காகவும் அவர் சிந்தித்தார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்ததுதான் உண்மையான ஜனநாயகம், சமத்துவம் இல்லாத சுதந்திரம் ஆதிக்கத்துக்குத் தான் வழிவகுக்கும் என்றார். இந்திய அரசியல் சாசனம், அரசியல் சமத்துவத்துக்கு வழிகோலுமே தவிர சமூக, பொருளாதார சமத்துவம் ஏற்பட உதவாது என்றவர் அம்பேத்கர்’’ என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்