சென்னை: “அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்” என புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார்.
அம்பேத்கர் நினைவு நாளான இன்று (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டெ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து மேடையில் பேசிய விஜய், “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து சாதித்தவர் அம்பேத்கர். அவர் எந்தச் சூழ்நிலையில் கொலம்பியா போனார் என்பதுதான் முக்கியம். மாணவர்களுடன் சரிசமமாக உட்கார அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரை படிக்கத் தூண்டியது, அவருக்குள் இருந்த அந்த வைராக்கியம். அந்த வைராக்கியம்தான் அவரை தலைசிறந்த அறிவுஜீவியாகயும் மாற்றியது. வன்மத்தை மட்டுமே தனக்கு கொடுத்த இந்தச் சமூகத்துக்கு அவர் செய்த செயல்களை படிக்கும்போது சிலிர்க்கிறது. நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பெருமை தேடித் தந்தவர்.
இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் இன்றைய இந்தியாவை பார்த்து அவர் என்ன நினைப்பார். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால், சுதந்திரமாகவும், நியாயமாக தான் தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கையை கொண்டு வரவேண்டும். அதற்கு ஒருமித்த கருத்துடன் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலிமையான கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது என்னுடைய மற்றொரு கோரிக்கை. இதனை நான் மத்திய அரசிடம் முன்வைக்கிறேன்.
» “2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்...” - விஜய் மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு
» "டெல்லியில் அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்காதது ஏன்?” - ஹெச்.ராஜா கேள்வி
இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியும். அதை கண்டுகொள்ளாமல் ஓர் அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அங்குதான் அப்படி என்றால் இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது என்றால், சமூக நீதி பேசும் இங்கிருக்கும் அரசு, வேங்கைவயல் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார். பெண்களுக்கு எதிரான குற்றம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், மனித உயிர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முழுமையாக அளிக்கும், மக்களை நேசிக்கும் ஒரு நல்ல அரசுதான் இதற்கான தீர்வு.
இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், மக்களுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதும், சம்பிரதாயத்துக்காக மழை தண்ணியில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில நேரங்களில் அப்படி செய்யவேண்டியுள்ளது. மக்களுடன் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காவும், அவர்களுடன் உணர்வுபூர்வமாகவும் எப்போதும் இருப்பேன்.
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கான அடிப்படை சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” என்று விஜய் பேசினார். வீடியோ இங்கே...
‘2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்’ - முன்னதாக, ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழலையும், மதவாதத்தையும் விஜய் எடுத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வேங்கை வயல் பிரச்சினை இன்றைக்கு வரை தீர்க்க முடியாததற்கு காரணம் என்ன? ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். சாதிதான் இதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும். விஜய் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று அந்த மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர்” என்றார்.
முன்னதாக, ‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். அதன் விவரம்: விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago