சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ‘விழுதுகள்’ மறுவாழ்வு சேவை வாகனம், புற உலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மைய சேவைகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செயதிக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி சுமார் 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ரூ.130 கோடியில் பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதன் அடையாளமாக, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.211 கோடியில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘தமிழ்நாடு உரிமைகள்’ திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்க மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களுக்கு வர இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக ‘விழுதுகள்’ என்ற முதல் மறுவாழ்வு சேவை வாகனத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இந்த வாகனங்கள் பயணிக்கும். அங்கு உள்ள மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கேற்ப, இயன்முறை, கேட்டல், பேச்சு பயிற்சி, சிறப்பு கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகள் இந்த வாகனங்களில் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறந்த சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள் என 16 பேருக்கு மாநில அளவிலான விருதுகளை முதல்வர் வழங்கினார்.
புற உலக சிந்தனையற்ற நபர்களுக்கு (ஆட்டிசம்) ஒரே குடையின்கீழ் அனைத்து வகையான மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கும் வகையில் தமிழகத்தில் புதிய முயற்சியாக சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவமனை வளாகத்தில் ரூ.15 கோடியில் ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு புற உலக சிந்தனையற்றோரை கண்டறிதல், மதிப்பீடு செய்தல், அவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்குதல், கேட்டல், பேச்சு பயிற்சி, தொழில்சார்ந்த பயிற்சி அளித்தல், இயன்முறை, செயல்முறை, பகல்நேர பராமரிப்பு, உளவியல் போன்ற சேவைகள் அவர்களுக்கும், பெற்றோருக்கும் பல்துறை வல்லுநர்கள் மூலம் வழங்கப்படும். இந்த சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் 35 ஆரம்பநிலை இடையீட்டு மையங்களை மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் வலுப்படுத்தி, ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையங்களாக முதல்வர் அறிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் முருகானந்தம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் சிஜி தாமஸ் வைத்யன், மாநில ஆணையர் சுதன், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் எம்.லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago