விறுவிறு விஜய், சிணுங்கும் சீமான், அடிதடி அதிமுக, திட்டு திமுக, விக்கல் விசிக, பாயும் பாமக, பழிக்கும் பாஜக என அனைத்துக் கட்சிகளையும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்ட நிலையில் தேமுதிகவும் தேர்தல் ஜுரத்துக்கு மருந்து தேடும் வேலையில் இறங்கி இருக்கிறது.
கேப்டன் இல்லாத தாக்கம் தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்தவரைக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வேலைகளில் மெனக்கிட்டு வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அந்த வகையில், கட்சியின் பலத்தை பொறுத்து எங் கெல்லாம் சிறப்புக் கவனமெடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது என்பதற்கான கள ஆய்வு இப்போது தேமுதிக வட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர், “இம்முறை தென்மாவட்டங்களில் அதிகமான இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் தலைமை இருக்கிறது. அதற்கேற்ப, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியிடம் தொகுதிகளை கேட்டுப் பெறவும் திட்டமிடுகிறார் பிரேமலதா.
குறிப்பாக, மக்களவைத் தேர்தலில் நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்த விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை உட்பட 2 தொகுதிகளிலும் மதுரையில், மதுரை மத்தி உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் இம்முறை தேமுதிக போட்டியிடும். பிரேமலதாவை அருப்புக்கோட்டையில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அங்கு இல்லாவிட்டால் அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடலாம்.
விஜய பிரபாகரன் சட்டமன்றத் தேர்தலுக்கு வரமாட்டார். அவர் மீண்டும் மக்களவைத் தேர்தலில் அதே விருதுநகரில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். மற்ற கட்சிகளைப் போலவே, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த பட்டியல் ரெடியாகிறது. இம்முறை மாவட்டச் செயலாளர்களே தேர்தல் பொறுப்பாளர்களை தேர்வு செய்து தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள். ஜனவரியில் தேமுதிக பொதுக்குழு கூடுகிறது.
அப்போது விஜய பிரபாகரனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம். அதற்கு முன்னதாக, கேப்டன் மறைவு தினத்தையொட்டி, டிசம்பரில் சென்னையில் பிரம்மாண்டமான அமைதிப் பேரணியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட்டங்களை நடத்துவதற்கும் தலைமை எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது.
கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அவரவர் பகுதியிலேயே அலுவலகங்களை திறந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அவற்றை தீர்த்துவைத்து அபிமானத்தைப் பெறவும் தலைமை அறிவுறுத்தியுள்ளது. புதிதாக தேமுதிகவில் இணைய நினைப்பவர்களுக்கு வசதியாக அந்தந்த மாவட்டங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவும் திட்டமிடப்படுகிறது” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், “கேப்டனின் மறைவால் ஏற்பட்ட அனுதாப அலையால் தேமுதிகவுக்கு செல்வாக்கு முன்பைவிட கூடியிருக்கிறது. ஆகவே, 2026 தேர்தல் எங்களுக்கு நிச்சயம் திருப்புமுனையாக அமையும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே தலைமை எங்களுக்கு வழிகாட்டல்களை வழங்கி வருகிறது. நிச்சயம் இந்தத் தேர்தலில் நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம்” என்றார். ஆளாளுக்கு ஒரு திட்டத்தோட தான் இருக்காங்கப்பா!
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago