திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி புதைந்திருந்த எஞ்சிய 2 பேர் உடல்களும் மீட்கப்பட்டன. இதன்மூலம் 48 மணி நேர மீட்புப் பணி முடிவுக்கு வந்தது.
ஃபெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழைக்கு, திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் திருஅண்ணாமலையார் மலையில் கடந்த 1-ம் தேதி மாலை மண் சரிவு ஏற்பட்டது. மழைநீருடன் மண், கற்கள் மற்றும் பாறைகள் அடித்துவரப்பட்டன. இதில், திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 11-வது வீதியில், மலையடிவாரத்தில் இருந்த 4 வீடுகள் மீது பாறைகள் விழுந்ததால், மண்ணில் புதைந்தது.
இந்தத் துயர சம்பத்தில் ராஜ்குமார் (38), அவரது மனைவி மீனா (27), இவர்களது மகன் கவுதம் (9), மகள் இனியா (5) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணன் மகள் ரம்யா (7), மஞ்சுநாதன் மகள் விநோதினி (14), சுரேஷ் மகள் மகா (7) ஆகியோர் மண்ணில் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட 170 பேர் ஈடுபட்டனர். 2-வது நாளான நேற்று (டிச.2) மாலை 6 மணிக்கு பிறகு அடுத்தடுத்து 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மழை பெய்ததாலும், இருள் சூழ்ந்ததாலும் மீட்பு பணியை தொடர முடியவில்லை. 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டதால், எஞ்சிய 2 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு மீட்பு குழுவினர் வந்தனர். இதையடுத்து, 3-வது நாளாக இன்று (டிச.3) மீட்புப் பணி தொடர்ந்தது. இதில், 6-வது உடல் காலை 11 மணியளவில் மீட்கப்பட்டது. மேலும், மற்றொருவரது உடல் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. அந்த உடல் மீது ராட்சத பாறை இருந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. பாறை சரிந்தால், மேலும் இழப்பு ஏற்படலாம் என்பதால், ஐஐடி வல்லுநர் குழுவுடன் மீட்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் டிச.9 வரை மிதமான மழை வாய்ப்பு
» கிருஷ்ணாபுரம் அணையில் உபரி நீர் திறப்பு: பள்ளிப்பட்டு அருகே மூழ்கிய 3 தரைப்பாலங்கள்
பின்னர், சிறிய பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மாலை 4 மணியில் இருந்து ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு பல பாகங்களாக 7-வது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏழு பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது.
ஐஐடி வல்லுநர்கள் ஆய்வு: மண் சரிவு ஏற்பட்ட இடத்தை சென்னை ஐஐடி. வல்லுநர்கள் மோகன், பூமிநாதன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். இது குறித்து மோகன் கூறும்போது, “தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலை உச்சியில் இருந்து வந்த தண்ணீரின் வேகத்தால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு வந்துள்ளது. மண் மாதிரியை சேகரித்து, மண்ணின் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதன் அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும்” என்றார்.
மக்கள் விரும்பினால் ஏற்பாடு: இதற்கிடையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச.2) இரவு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலையில் மண் சரிவு மற்றும் பாறை சரிவில் சிக்கி 7 உயிர்கள் பறிபோயிருப்பது, மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், அவர்களது உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மலையடிவாரத்தில் இருந்து வெளியே வருவதற்கு மக்கள் விரும்பினால் மாற்று ஏற்பாடு செய்வோம்” என்றார்.
ரூ.5 லட்சம் நிவாரண நிதி: இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 11-வது வீதியில் வசித்த ராஜ்குமார், கன மழை காரணமாக மரம் விழுந்ததால், கதவை திறக்க முயன்றபோது, அவரது வீட்டின் மீது பெரிய பாறை உருண்டு விழுந்தது. மண் மற்றும் பாறையால் வீடு புதைந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கும் முயற்சிகள் பலன் அளிக்காமல், துரதிஷ்டவசமாக வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago