நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அதேசமயம், கிராம அளவில் கட்சிக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பை வைத்திருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மத்தியில், அடிப்படைக் கட்டமைப்பே இல்லாத விஜய்யால் எப்படி வாகை சூடமுடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இப்படிக் கேட்பவர்களை எல்லாம் ராமநாதபுரம் மாவட்ட தவெக தலைவர் மலர்விழி ஜெயபாலா திகைத்து திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் மாவட்ட வாரியாக செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்தவர்களில் பலர் தவெக மாவட்ட தலைவர்களாக செயலாற்றி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா. நவம்பர் 21-ம் தேதி ஒரே நாளில் ராமேசுவரத்தில் 44 செ.மீ, அளவுக்கு பேய்மழை கொட்டித் தீர்த்தது.
எதிர்பாராத இந்த மழையால் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரப் புள்ளிகள் சம்பிரதாய சடங்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் இருந்த மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்க ஏற்பாடு செய்தனர்.
ஆனால், மலர்விழி ஜெயபாலா இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி மீனவ குடிசைகளுக்குள் இருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சுமார் 200 பேருக்கு உணவு வழங்கியதுடன், மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.30 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்தார். இதேபோல் அண்மையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர் சுரேஷ் என்பவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் கடலில் மூழ்கி மாயமானார். இன்று அவரை அவருக்கு என்ன ஆனதென்று உறுதியாகத் தெரியவில்லை.
» ‘புஷ்பா 2’ பயணம் நிறைய அனுபவத்தை கொடுத்தது: சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி
» தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: குடியிருப்பில் சூழ்ந்த மழைநீர் வடிய தொடங்கியுள்ளது
இதையடுத்து கடந்த 25-ம் தேதி, சுரேஷின் மனைவியை அழைத்துக் கொண்டு கட்சியினர் சகிதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மலர்விழி, சுரேஷின் உடலைக் கண்டுபிடித்துக் தரக்கோரி மனு கொடுக்க வைத்தார். மீனவர் பிரச்சினைகளில் தவெக தலைவர் விஜய் சிறப்புக் கவனமெடுத்து வரும் நிலையில் மலர்விழியின் மீனவர்கள் சார்ந்த இத்தகைய செயல்பாடுகளும் மற்ற அரசியல்வாதிகளை யோசிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து மலர்விழி ஜெயபாலாவிடம் நாம் பேசியபோது, “பெருசா ஒண்ணும்மில்லங்க... தலைவர் விஜய்யின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தன்னடக்கம் காட்டியவர், “மாவட்டத்தில் 20 இடங்களில் கொடி ஏற்றி, கிளைப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். 429 ஊராட்சிகளிலும் கிளைகளை உருவாக்கி மக்கள் பணியாற்றும் நோக்கில் சென்று கொண்டிருக்கிறோம். திருவாடானை அருகே முள்ளிமுனை மீனவர் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள் கேட்ட அந்த சிறிய சாலையை அரசை எதிர்பார்க்காமல் நாங்களே அமைத்துக் கொடுத்தோம்.
இது போல் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள பல மக்கள் நலத்திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைந்து செயல்படுத்த உள்ளோம். மாவட்டத்தின் பிரதான பிரச்சினையான குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்போம்” என்றார். கட்சி தலைவர் மட்டும் கட்டுச் செட்டாக இருந்தால் போதாது. கட்சிக்காக களத்தில் நிற்கும் தளகர்த்தர்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக புரிந்துகொண்டிருக்கிறார் மலர்விழி!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago