சென்னை: “ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
» சீனாவில் ரஜினியின் ‘2.0’ வசூலை முறியடித்த ‘மகாராஜா’!
» “சாத்தனூர் அணை விவகாரத்தில் அதிமேதாவிகளுக்கு அறிக்கை விட்டிருக்கிறேன்” - துரைமுருகன்
அங்கு ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட திங்கள்கிழமை தமிழக முதல்வர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.துணை முதல்வரும், அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில், இன்று (டிச.3) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார். பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.
> புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்;
> சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்;
> முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
> மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;
> பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும்;
> மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கிடவும்;
> எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கிடவும்;
> வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்;
> அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;
> மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்;
> மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago