வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு

By வி.சீனிவாசன்

சேலம்: வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது, என அதிமுக பொதுச் செய்லாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சேலம் 12 கந்தம்பட்டி பை-பாஸ் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமணமுத்தாற்றின் கரையோரம் இருக்கின்ற வீடுகளில் பல இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் சீரங்கன் தெரு, மீனாட்சிபுரம், சிவதாபுரம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில், வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தை தாண்டி மழை வெள்ளம் செல்லக்கூடிய நிலை உள்ளது. அல்லிக்குட்டை, கொண்டலாம்பட்டி பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழை, சேலம் மாநகரத்தில் பெய்த மழை ஆகியவற்றின் காரணமாக இத்தகையை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் வேகமாக, துரிதமாக மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

மக்களுக்குத் தேவையான போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். மேலும் ஏற்காட்டில் 22 கிராமங்களுக்கு செல்லக்கூடிய தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புளியங்கடை கிராமத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

திருமணிமுத்தாற்றில் முறையாக தூர்வாராத காரணத்தால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. திமுக அரசு, சேலம் மாநகராட்சி சரியாக செயல்படாத காரணத்தால் அடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் நகரத்திற்குள், குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. உரிய முறையில் முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பெஞ்சல் புயலால், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் மழை பாதிப்பு உள்ளது.

வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இரவு 2 மணிக்கு சாத்தனூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விட்டனர். தொலைக்காட்சியிலோ, நாளிதழ்களிலோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொதுமக்களுக்கு அறிவிப்பும் இல்லை. தென்பெண்ணையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தென்பெண்ணையாற்றின் கரை உடைந்ததால் விழுப்புரம் நகரில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. உரிய முன் எச்சரிக்கை விடுக்காத, திறமையற்ற முதல்வர் ஆண்டு கொண்டிருப்பதால் பொதுமக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகளில் தண்ணீர் திறக்கும்போது உரிய எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்களது உடைமைகளுடன் செல்ல முடியும்.

ஆனால் அரசின் அலட்சியத்தால் தென்பெண்ணையாற்றுக் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடுமையான கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மத்திய அரசிடம் நிதி கோரப்படுகிறது. அந்த வகையில் ஃபெஞ்சல் புயலால் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு மத்திய அரசை அணுகி நிதி பெற முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் மழை வெள்ளத்தில் எப்போது நீர் வீட்டிற்குள் புகுமோ என இரவில் கூட அச்சத்தில் விழித்துள்ளனர். திறமையற்ற முதலமைச்சரால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தூங்காமல் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்