சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தப்படி அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதை செயல்படுத்த இயலாது என்று அரசு அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்குக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.50,000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி ஆணையிட்டது.
அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 18-ம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30-ம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழக அரசின் கல்லூரிக் கல்வி ஆணையரகம், இப்போதுள்ள ரூ.25,000 ஊதியம் தான் தொடர்ந்து வழங்கப்படும் என்று கடந்த 29-ம் தேதி பிறப்பித்த ஆணையில் கூறியிருக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மறுப்பது இது இரண்டாவது முறையாகும். இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரூ.25,000 என்ற நிலையை எட்டியது.
அதையும் ஆண்டுக்கு ஒரு மாதம் வழங்க மறுப்பதும், மாதக்கணக்கில் நிலுவை வைப்பதும் நியாயமல்ல. தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பை சுரண்டக்கூடாது. சமூக நீதியில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago