சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில், இந்தப் பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஃபெஞ்சல் புயல் நவ.23-ம் தேதி குறைந்த தாழ்வழுத்தப் பகுதியாக உருவெடுத்து, தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
டிசம்பர் 1-ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.
1.5 கோடி பேர் பாதிப்பு: இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி பேரும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு முழு பருவத்தின் சராசரிக்கு (50 செ.மீ.க்கு மேல்) ஒரே நாளில் மழை பெய்துள்ளது. இதன் விளைவாக பரவலான வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
» விஜய் குறித்து அண்ணாமலை பேசியது வெளிச்சம் தேடும் முயற்சி: தவெக விமர்சனம்
» தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு: கடலூரில் 50+ குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிப்பு
இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க, அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ளோம். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 9 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும், 9 மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, 38,000 அரசு அலுவலர்கள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதலுதவிப் பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்குத் தேவையான நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. உணவு தயாரிப்பு இடங்கள் நிறுவப்பட்டு, உணவு தயாரிக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற 12,648 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. புயல் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு இன்று (02.12.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
இழப்பும் சேதமும்: இந்தப் பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயல் வெள்ளத்தினால் 9,576 கி.மீ சாலைகள், 1,847 சிறுபாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்துள்ளன.
1,649 கி.மீ அளவிற்கு மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள் 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளிக் கட்டடங்கள், 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்தச் சேதங்கள் குறித்து, தமிழ்நாடு அரசு முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பேரிடரின் அளவு மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுவதால், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் கோடியினை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அவசரகால நிதி மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு மாநில அரசுக்கு பெருமளவில் உதவிகரமாக இருக்கும். மேலும், தமிழ்நாட்டில் இந்தப் புயல் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். அக்குழுவினரின் ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள, தேவைப்படும் கூடுதல் நிதியினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நிலையிலிருந்து மீண்டு, இயல்பு நிலையை விரைவில் எட்டுவதற்கு, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று தான் நம்புகிறேன். இவ்விஷயத்தில் பிரதமரின் ஆதரவையும், சாதகமான பதிலையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்” என அக்கடித்தத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago