திருவண்ணாமலை: 9 ஆண்டுகளுக்குப் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியை நினைவுகூர்வது போன்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், நள்ளிரவு திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியது 4 மாவட்ட மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று (டிச.1) காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் இன்று (டிச.2) அதிகாலை 2.45 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. நீர்வரத்து குறைந்ததால், ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என அறிவித்துவிட்டு, நள்ளிரவில் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கரையோரங்களில் வசித்த 4 மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
டிச.1-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத் துறை விடுத்தது. இதில், சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படலாம் என உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த 5 மணி நேரத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடியும், அடுத்த 2 மணி நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று (டிச.2) அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணியளவில் ஊடகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வளத் துறை எச்சரிக்கை சென்றடையவில்லை.
» புதுச்சேரி நகர் பகுதியில் வடியத் தொடங்கிய வெள்ளம் - திரும்பும் இயல்பு வாழ்க்கை!
» இரண்டாம் நிலை காவலர்கள் 2,665 பேருக்கு 8 மாவட்டங்களில் பயிற்சி!
அதுமட்டுமின்றி எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. திருவண்ணாமலை - விழுப்புரம், திருக்கோவிலூர் - விழுப்புரம், விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.
2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் திறந்துவிட்டு, சென்னையை மூழ்கடித்ததை நினைவு கூறுவது போன்று, 9 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவில் 1 லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்படும் என முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, 4 மாவட்ட மக்களை நீர்வளத் துறையினர் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளனர். கிருஷ்ணகிரி அணை, வாணியாறு அணை, பாம்பாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியதாக நீர்வளத் துறையினர் கூறுகின்றனர்.
இதனிடையே, சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையிருந்து, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான சாலைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. | முழு விவரம்: தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு: சென்னை - தென் மாவட்டங்களுக்கான சாலைவழி போக்குவரத்து பாதிப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago