விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலையில் 1.29 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் சேதம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: “விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் மூழ்கியிருக்கிறது. தற்போதைய உத்தேசமான கணக்கெடுப்பின்படி, 1,29,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு, தேங்கியுள்ள நீர் வடிந்தபின், முறையான, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழகம் பரவலாக கடுமையான மழைப்பொழிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இவையல்லாமல், மற்ற மாவட்டங்களிலும் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி உள்ளது.

இந்தப் புயல் தொடங்குவதற்கு முன்பாகவே அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி உரிய நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டிருக்கிறோம். அதேபோல, அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு, இந்த விபரங்களை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தோம்.

அதேபோல, காணொலி மூலமாகவும் அவர்களை தொடர்பு கொண்டு ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணிக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்துக்கு, சுமார் 407 வீரர்களை உள்ளடக்கிய 7 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்களும், 8 மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்களும், என மொத்தம் 15 குழுக்களும், கடலூர் மாவட்டத்துக்கு 56 வீரர்களைக் கொண்ட 2 குழுக்களும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 30 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவும், ஆக மொத்தம் மூன்று மாவட்டங்களுக்கும் 493 மீட்புக் குழு வீரர்கள், 18 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிக் குழுவினருடன், மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையைச் சேர்ந்த வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் 180, கடலூர் மாவட்டத்தில் 247 மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 என மொத்தம் 637 தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல், மழையிலிருந்து பாதுகாப்பாக பொது மக்களைத் தங்க வைக்க தற்போது 174 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 7 ஆயிரத்து 876 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, உணவு, மருத்துவ வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்படைந்து மின்சாரம் இன்றி பல பகுதிகள், பல கிராமங்கள், பேரூராட்சிகள் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதையும் சரி செய்வதற்கான 900 நபர்கள் அந்தப் பணியில் இன்றைக்கு மின்வாரியத் துறையின் சார்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாக மின்சாரம் தர முடியாத சூழ்நிலை இருக்கிறது. தண்ணீர் வடிந்த பகுதிகளில் எல்லாம் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மழையின் அளவு கடலோர மாவட்டங்களில் குறைந்திருந்தாலும், உள்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த ஒரு சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயிர் சேதங்களைப் பொறுத்தவரையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் மூழ்கியிருக்கிறது.

தற்போதைய உத்தேசமான கணக்கெடுப்பின்படி, 1,29,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு, தேங்கியுள்ள நீர் வடிந்தபின், முறையான, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும். அதேபோல் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய நம்முடைய களப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புயலின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சேதமடைந்த வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கும் உரிய நிவாரணமும் வழங்கப்படுகிறது. துணை முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நானும், சென்னையில் கள ஆய்வுகளையும், ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தியதோடு, தற்போது இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓரளவுக்கு பார்வையிட்டு வந்திருக்கிறேன்; ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன்.வரும் வழியிலேயே தற்போது கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அங்குள்ள நிலவரங்களை நான் ஓரளவு கேட்டறிந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக பாதிப்பிலிருந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவருவதற்கான பணிகளை உடனடியாக செய்திட வேண்டுமென்று அவர்களுக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன்.

நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, சேதங்களைப் பார்வையிட உடனடியாக குழுவினை அனுப்பி வைப்பதற்கான அந்தக் கோரிக்கையையும் நிச்சயமாக தமிழக அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம்,” என்றார்.

‘மத்திய அரசின் மீது நம்பிக்கை இருக்கிறதா, தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கேட்ட தொகை வழங்கவில்லை. தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா? கடுமையான பாதிப்புகளை தமிழகம் சந்திந்திருக்கிறதே’ என்ற கேள்விக்கு, “நம்பிக்கையோடுதான் அனுப்புகிறோம். அதையும் எப்படி சமாளிப்பது என்பதை பிறகு நாங்கள் முடிவு செய்கிறோம்” என்றார்.

‘நாடாளுமன்றத்தில் இன்றைக்கு திமுக எம்.பி.க்கள் புயல் பாதிப்பை பற்றி பேசவிடவில்லையே. அப்படி இருக்கும்போது நம்முடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா?’ என்ற கேள்விக்கு, “பேச விடவில்லை. முறைப்படி இது எங்களுடைய கடமை. எவ்வளவு சேதாரம் ஏற்பட்டிருக்கிறது; மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்தைப் பொறுத்தவரையில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து அனுப்புவது எங்களுடைய கடமை. அதைச் செய்வது அவர்களுடைய கடமை. ஆனால் அதை செய்ய ஒவ்வொரு முறையும் மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், அதையும் மீறி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். பார்ப்போம்” என்றார்.

‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் பயிர்களுக்கெல்லாம் வருடத்துக்கு இரட்டை இழப்பீடு கொடுத்தோம். ஆனால், திமுக அரசு காலம் தாழ்த்தி வழங்குகிறது’ என்ற கேள்விக்கு, “அவர் எதிர்க்கட்சித் தலைவர், குற்றம் சொல்வதுதான் அவருடைய கடமை. அதைப்பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. இருந்தாலும் நான் சொல்கிறேன். மக்களுக்கு தெளிவாக தெரியும். எந்த ஆட்சியில் மக்களுக்குரிய பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று நன்றாக தெரியும்” என்றார்.

‘திருவண்ணமலையில் மண் சரிவு காரணமாக 3 வீட்டில் ஏழு பேர் சிக்கியிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறதா?’ என்ற கேள்விக்கு, “மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பேசிக் கொண்டுதான் வருகிறேன். ஐஐடி-லிருந்து சில பொறியாளர்களை வரவழைத்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றார்.

‘விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தண்ணீரில் முழ்கியிருக்கிறது. அவர்களுக்கு அத்தியாவசியமான உணவு, குடிநீர் தேவைப்படுகிறது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?’ எனும் கேள்விக்கு, “உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. படகுகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக கொண்டு போய் சேர்க்கப்படுகிறது” என்றார். ‘50 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. வானிலை மையத்தின் அறிவிப்பு நமக்கு சரியான முறையில் இருந்ததா?’ என்ற கேள்விக்கு, “ஓரளவு இருந்தது,” என்றார்.

‘அடுத்த மாவட்டத்துக்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்கு, “தேவையில்லை. அங்கெல்லாம் மழை பெய்து பாதிப்பு அதிகம் இல்லை. விழுப்புரம், கடலூர், சென்னை, சென்னையை ஒட்டியுள்ள சில இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது என்ற தகவல் வந்தது. உடனடியாக துணை முதல்வருக்கு தொலைபேசியில் பேசி அவரை உடனடியாக போகச் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், பொறுப்பு அமைச்சர்கள் அருகிலுள்ள மாவட்ட அமைச்சர்களையும் உடனடியாக அங்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள சொல்லியிருக்கிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்