புதிதாக பேருந்து நிலையம் வந்தால் ஊருக்கு நல்லது என்பார்கள். ஆனால், திண்டிவனத்து அரசியல்வாதிகள், “திண்டிவனத்துல பேருந்து நிலையம் கட்டினால் சென்டிமென்ட்டா அது அரசியல்வாதிகளுக்கு ஆகாதுல்ல” என்று அபாயச் சங்கு ஊதிவைத்திருக்கிறார்கள். இதனால் தானோ என்னவோ திண்டிவனத்துக்கு புதிதாக பேருந்து நிலையம் கட்டும் திட்டம் 32 ஆண்டுகளாக ஜவ்வாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது.
“நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்” என 1991-ல் அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். அப்படி அறிவித்த அவர் இடமாற்றம் செய்யப்பட்டதால் பேருந்து நிலைய பேச்சு அத்தோடு நின்றுபோனது.
அத்தோடு இந்தப் பிரச்சினை குறித்து யாரும் வாய்திறக்காத நிலையில், 2001-ல் அப்போதைய திண்டிவனம் எம்எல்ஏ-வும் அமைச்சருமான சி.வி.சண்முகம் வக்பு வாரிய இடத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முயன்றார். ஆனால், அதிமுக நகர்மன்றத் தலைவர் ஹீராசந்த் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதன்பின் 2005-ல், 6 லட்சம் முன்பணம், 60 ஆயிரம் வாடகை என்ற ஒப்பந்தப்படி வக்பு வாரிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி ஒத்துக்கொண்டது. இதையடுத்து அந்த ஆண்டே டிசம்பர் 30-ல் அந்த இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், 33 நாட்கள் மட்டுமே இயங்கிய அந்தப் பேருந்து நிலையம் அதன்பிறகு மூடப்பட்டது.
» ஏற்காட்டில் ஒரே நாளில் 238 மி.மீ. மழை: மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
இதையடுத்து, திண்டிவனம் ஏரி பகுதியில் புதிய பேருந்து நிலையம் ஓராண்டுக்குள் அமைக்கப்படும் என 2009-ல் அறிவித்தது நகராட்சி. ஆனால், சொன்னபடி பேருந்து நிலையம் வந்தபாடில்லை. இதனால் 2011-ல் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய திண்டிவனம் எம்எல்ஏ-வான ஹரிதாஸ், “திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் உடனே அமைக்கப்படவேண்டும்” என்று பேசி அரசின் கவனத்தை ஈர்த்தார். அத்தோடு அவரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது. இப்படி, ‘தொட்டது துலங்காமல்’ போனதால் அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதிமுக திண்டிவனம் பேருந்து நிலையம் குறித்து பேச்சே எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு, 6 ஏக்கர் பரப்பளவில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அப்போதைய அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளும் வேகமெடுத்த நிலையில், மஸ்தானின் கட்சிப் பதவியும், அமைச்சர் பதவியும் சேர்ந்தே பறிபோனது. இப்போது 80 சதவீத பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
பணிகள் முழுமைபெற்றதும் முதல்வர் நேரில் வந்து பேருந்து நிலையத்தைத் திறந்துவைப்பாரா அல்லது காணொலியில் தானா என்று விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் சேகரிடம் கேட்டபோது, “பணிகள் முழுமையாக முடிவடைந்த பின் திறப்பு விழா குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என முடித்துக் கொண்டார்.
இது தொடர்பாக திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ-வான அர்ச்சுனனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில்சொல்லவே தயங்கினார். பாஜக மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் குமாரிடம் பேருந்து நிலைய சென்டிமென்ட் குறித்து கேட்டபோது, “நீங்கள் சொல்லும் சென்டிமென்ட் ஆட்சியர் கரியாலி காலத்திலிருந்தே இருக்கே” என்றார். இதனிடையே பேருந்து நிலையத்தை ஏரிக்குள் கட்டுவதாக பாமக தலைவர் அன்பு மணி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
திண்டிவனத்து மக்களோ, “இது மாதிரியான மூடநம்பிக்கைகளால் தான் திண்டிவனம் நகரம் வளர்ச்சியடையாமலே இருக்கு. 32 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த புதிய பேருந்து நிலைய விவகாரம் தொடர்கிறது. இப்போதாவது பணிகள் முழுமை பெற்று பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்கிறார்கள். கட்டிய பேருந்து நிலையத்தை திறப்பதற்குள்ளாக புதிதாக வேறு கதைகள் கிளம்பாமல் இருந்தால் சரி!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago