விஜய்யின் அரசியல் வருகை கண்டு பாஜக பயப்படாது: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

By துரை விஜயராஜ்

சென்னை: விஜய்யின் அரசியல் வருகை கண்டு பாஜக பயப்படாது என்றும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததிலேயே திமுகவின் குடும்ப ஆட்சி நிரூபணமாகி உள்ளது என்றும் லண்டனில் இருந்து திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, பாஜகவினர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவு என்ற துறை சார்பில் நடத்தப்பட்ட கல்வி உதவித் திட்டத்தில் சேர்ந்து 3 மாத காலம் படித்தேன். நோபல் பரிசு வென்றவர்கள், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் எனக்கு பாடம் எடுத்திருக்கிறார்கள். பெரிய, பெரிய ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் இருப்பவர்கள் அவ்வபோது நம்மை சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த 3 மாதம் என்பது என்னை சீர்படுத்திக்கொள்ளவும், அரசியலில் சிறப்பாக செயல்படுவதற்கும், குறை, நிறைகளை சரி செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த 3 மாத காலத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறோம். அதே சமயம், தனது முதல் மாநாட்டில் நிறைய விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். அதைப்பற்றி நேரம் வரும் போது பேசுகிறேன். மேலும், விஜய் முழு நேர அரசியலுக்கு வந்து, அவரது கருத்துக்களை முன்வைக்கும் போது, பாஜகவும் தனது கருத்துக்களை மக்கள் முன்பு வைக்கும். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார். புதிதாக வேறு எதுவும் அவர் பேசவில்லை.

விஜய்யின் பேச்சு, அவரது கொள்கை, கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப்போகிறது. எனவே, விஜய்யின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு என்பது மக்களுக்கு தெரியும். புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பாஜக எப்போது பயப்படாது. நடிப்பு என்பது வேறு, அரசியல் களம் என்பது வேறு. அக்.28-ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார்.

அவரை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம். அடுத்த ஓராண்டு காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க போகிறார்கள். இன்றைய சூழலில் திராவிட கட்சிகளின் வாக்குகள் மூன்றாக பிரிந்திருக்கிறது. பாஜகவின் வாக்கு அதிகரித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். திமுக எப்போதும் ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டை தான் பாஜக தொடர்ந்து வைத்து வருகிறது.

இன்று அது நிரூபனமாகி உள்ளது. வரும் காலத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால், நிச்சயமாக பாராட்டுவோம். அனைத்து மாநிலங்களிலும் பாஜக மிக வலிமையாக, முதன்மையான கட்சியாக திகழ்கிறது. மூன்று மாத காலமாக கோடிக்கணக்கான தொண்டர்கள் பாஜகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்திருக்கிறார்கள்.

தமிழகத்திலும் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். தற்போது பாஜக அமைப்பு தேர்தல் தொடங்கி உள்ளது. பாஜக தான் உன்மையான ஜனநாயக கட்சியாக இருக்கிறது. இந்தியாவிலேயே திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் தான் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது. நிரபராதியை கொண்டாடுவது போல, முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது.

இதேதான் ஆம் ஆத்மி கட்சியிலும் நடக்கிறது. சீமான் புதிய பாதையில் பயணிக்கிறார். பாஜகவின் பாதையும், சீமானின் பாதையும் வேறு வேறு. பாமக, அமமுக எங்களுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்