“நீக்கப்பட்டவர்களை சேர்ப்பது தொடர்பான பேச்சு நடந்துட்டுதான் இருக்கு!” - செங்கோட்டையன் பளிச் பேட்டி

By எஸ்.கோவிந்தராஜ்

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் அமைச்சரவையிலும் தனித்துவம் காட்டிய இவர் அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று வழிநடத்தியவர். ஒரு காலத்தில், ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணங்களைத் திட்டமிட்டு நடத்தி சபாஷ் பெற்றவர். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை வென்று இன்றளவும் அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அமைதிப்புயலான செங்கோட்டையன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து.....

மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் டெப்பாசிட் இழந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

வலிமையான கூட்டணி அமையாதது முதல் காரணம். யார் பிரதமர் என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது இரண்டாவது காரணம். ஆனாலும், மக்கள் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. இப்போது மாற்றம் தேவை என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதை வாக்குகளாக மாற்ற அதிமுக முயற்சி எடுத்து வருகிறது.

2026-ல் இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று சொல்லலாமா..?

கட்சிக்கு அவர்தான் பொதுச்செயலாளர். அவர்தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவராக உள்ளார். அப்புறமென்ன சந்தேகம் இருக்கிறது ? வேறு யார் முதல்வராக வருவார்கள்?

ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்கூட்டியே அறிவித்துவிட்டீர்களே..?

இன்றைய நிலை வேறு. நாளை நடப்பது வேறு. நாளை மறுதினம் நடக்கப் போவது வேறு. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படி வேண்டுமானால் மன மாற்றங்கள் இருக் கலாம். அதனால், தேர்தலின் போது, எந்தக் கட்சி, எந்தக் கூட்டணியில் இருக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முன் வைத்துள்ளார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

திராவிட இயக்க வரலாற்றில் இதுவரை கூட்டணி ஆட்சி என்ற நிலை வரவில்லை. எனினும் எதிர்காலத்தைப் பற்றி பேசுகிற போது, அதைப்பற்றி கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள், கழகப் பொதுச் செயலாளர்தான் கருத்துச் சொல்ல முடியும். நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய நிலைப்பாடாக உள்ளது. 2016-ல் அதிமுக தனித்து போட்டி யிட்டு வென்றதை ஞாபகப்படுத்துகிறேன்.

ஒரு கட்சி சிறப்பாக செயல்பட தொண்டர்களின் கருத்தைக் கேட்டு, தலைமை செயல்பட வேண்டுமா.. தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தொண்டர்கள் செயல்பட வேண்டுமா..?

தொண்டர் உணர்வை புரிந்துகொண்டு தலைமை செயல்படும். தலைமையின் கருத்தை உணர்ந்து தொண்டர்கள் செயல்படுவார்கள். இதுதான் அதிமுகவில் இருக்கிறது.

உதயநிதி, அண்ணாமலை, விஜய் என இளம் தலைவர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால், அதிமுகவில் அப்படியான இளைஞர்களை பார்க்க முடியவில்லையே?

கட்சியை வலிமையுடன் நடத்திச் செல்ல முதலில் சீனியர்கள் தேவை. ஒரு இயக்கத்திலிருந்து ஒருவரை தலைவராக அடையாளம் காட்டுவது வேறு. ஒரு இயக்கத்தை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவது என்பது வேறு. ஒரு கட்டத்தில் இயக்கத்தை எப்படி வழி நடத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் அதற்கான டாட்டி முடிவுகளை மேற்கொள்வார்கள்.

நீங்கள் உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள், இபிஎஸ்ஸை சந்தித்து கட்சியின் ஒற்றுமை குறித்தும், பிரிந்தவர்களை மீண்டும் ஐக்குக் சேர்ப்பது குறித்தும் வலியுறுத்திப் பேசியதாக தகவல் வெளியானது. அந்த சந்திப்பு குறித்து நீங்களாவது தெளிவுபடுத்தலாமே...

பொதுச்செயலாளரை முன்னணி நிர்வாகிகள் சந்தித்துப் பேசுவது இயல்பாக நடப்பது தான். இந்த சந்திப்பு பெரிய செய்தியாகி விட்டது. இந்த சந்திப்பின் போது, கட்சியை எப்படி வளர்க்கலாம் என்பது தொடர்பான பொதுவான கருத்து பறிமாற்றங்கள் நடந்தது. கருத்து பறிமாற்றம் என்பது வேறு. அழுத்தம் கொடுப்பது என்பது வேறு.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற குரல் ஒரு பகுதியில் வருகிறது. இன்னொருபுறம் சேர்க்க வேண்டியதில்லை என்ற குரல் வருகிறது. இதில் எது மெஜாரிட்டி, எது மைனாரிட்டி என்பது காலப்போக்கில் தான் தெரியும். ஆனால், அந்தப் பேச்சு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம், அதிமுக சரியான பாதையில் சென்றுகொண் டிருக்கின்றது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

சசிகலா ஒபிஎஸ் உள்ளிட்டோர் இணைப்பு குறித்து உங்களிடம் பேசி வருவதாக தகவல்கள் வருகிறதே?

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட யாரோடும், இன்று வரை நான் தொடர்பில் இல்லை.

ஜெயலலிதா மறைந்தபோது உங்களுக்கு முதல்வராகும் வாய்ப்பு வந்தது. ஆனால், நீங்கள் ஏற்கவில்லை என்று சொல்லப்படுவது உண்மையா?

ஓர் இயக்கத்தை ஒருவர் மட்டும்தான் இயக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டோர் விருப்பப்படுவது, இயக்கத்திற்கு சேதத்தை உருவாக்கும். இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஒரு இயக்கத்தை சரியாக கொண்டு செல்ல சில தியாகங்களைச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தான், ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதற்காக, அன்றைக்கு அப்படி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதோடு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் யாருக்குச் சரியாக அமைகிறதோ அதுதான் முடிவாகிறது. அதுமட்டுமில்லாது, அமைதியாக இருப்பது என் சுபாவம்.

அதிமுக கள ஆய்வு குழுவில் உங்களுக்கு இடமில்லை. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உங்களிடம் தலைமை கலந்து பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறதே..?

சில நேரங்களில் தலைமை தன்னிச்சையாக முடிவெடுக்கும். பல நேரங்களில் எங்களை எல்லாம் ஆலோசித்து முடிவெடுக் கும். கள ஆய்வு என்பது ஒரு கட்சியை வழிநடத்துவது குறித்து ஆய்வு செய்வது தான். அதற்கான குழுவில் அதிகம் பேரை போடுவதால், செயல்படுவதில் சிரமங்கள் ஏற்படும்.

அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் மோதல்கள் ஏற்பட்டு வருவது குறித்து..?

ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்கும் இடத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம். கலந்தாய்வு கூட்டத்தில் சிலர் பேச வாய்ப்பு கேட்டதையே. ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன. அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒரே குடும்பம் என்ற உணர்வோடுதான் உள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் பணம் கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் சொல்வது உண்மையா?

நான் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது வரை, கொள்கை அடிப்படையில், வெற்றி இலக்கு, ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற அடிப்படையில்தான் பேசி வந்துள்ளோம். இப்போதும் கூட பணம் கேட்டார்கள் என்பது போன்ற கருத்துகள் என் கவனத்திற்கு வரவில்லை. அப்படி இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.

காட்சிகளில் கோடீஸ்வரர்கள் தான் பொறுப்புகளுக்கு வர முடியும், தேர்லில் போட்டியிட முடியும் என்றாகிவிட்டதே..?

அன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டால், தேர்தல் செலவு என்பது அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையமே செலவு செய்யும் வரம்பினை உயர்த்தியுள்ளது. அப்படி இருக்கையில், செலவு செய்ய தகுதி படைத் தவர்கள், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தகுதி படைத்தவர்களை, தேர்தலின் போது வேட்பாளர்களாக தேர்வு செய்ய கட்சித் தலைமை ஆய்வு செய்யும்.

தவெக மாநாட்டில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

நடிகராக உள்ள விஜய் அரசியல் கட்சி தொடங்கி வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார். ஆனால், எல்லா நடிகர்களும் எம்ஜிஆர் போல் வெற்றி பெற முடியாது. திமுகவில் பல பதவிகளை வகித்த பின்பே, எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். அவருக்கு மாபெரும் வெற்றியை மக்கள் வழங்கினர். அதோடு, எம்ஜிஆர் திரையுலகின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அதிமுக என்பது ஒரு குடும்ப இயக்கம். எங்கள் குடும்பத்து இளைஞர்கள், இளம் பெண்கள் எங்களிடம் தான் இருப்பார்கள். அவர்களை யாரும் மடைமாற்றி விட முடியாது.எனவே. கூட்டத்தை வைத்து இளைஞர்கள் விஜய் பின்னால் சென்று விட்டனர் என்று சொல்ல முடியாது.

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், கட்சி ஒற்றுமையாக இருக்க, ஜானகி பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார். இரட்டை இலை என்பது ஒரு பெரிய பிரம்மாஸ்திரம் என்று கருத்து தெரிவித்தார். அவர் சொன்னதற்கு வேறு ஏதும் உள்ளர்த்தம் இருக்கிறதா?

ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா என்பதால் அவரை பெருமைப்படுத்தி ரஜினி காந்த் பேசினார். இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என்பதற்காக, இயக்கத்தை அவர் ஒன்றிணைத்தார் என்பது வரலாறு. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டார். அதில் வேறு அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரிய வில்லை.

உங்களது 50 ஆண்டு கால தேர்தல் பணி, அரசியல் பணி அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயசரிதை ரெடியாகிறதாமே... அதிலாவது திரைமறைவு தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதா?

எனது வாழ்க்கை வரலாறு தொடர்பாக நண்பர்கள் சிலர் விரும்பி தொகுத்து வருகின்றனர். அவை முழுமை பெறும்போது சுய சரிதை நூலாக வெளிவர வாய்ப்புள்ளது. அதில், யார் மனதையும் காயப்படுத்தாத உண்மைகள் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்