விழுப்புரம், கடலூர், புதுவையிலும் மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவைகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ., மழை பெய்திருக்கிறது. நேமூர் 35.20 செ.மீ., வல்லம் 32 செ.மீ., செம்மேடு 31 செ.மீ., வானூர் 24 செ.மீ., மழை பெய்திருக்கிறது. இதனால், திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

வீடூர் அணையிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அப்பகுதியிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. பயிர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மழையால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்புகளுக்கு அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையுமே காரணமாகும். திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசுத் தரப்பில் போதிய உதவிகள் வழங்கப்படாததால், சில இடங்களில் உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுவை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கோட்டக்குப்பத்தில் மழைநீர் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை - வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு உழவர்களுக்கும், பொதுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கும் உரிய இழப்பீடுகளை வழங்க வழங்க வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 47 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதைத் தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியைக் கோர வேண்டும்.

மழை மற்றும் புயல் காற்றால் விழுந்துள்ள தென்னை மரங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்