சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி இதற்கு ‘ஃபெஞ்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்துவட தமிழக கடற்கரை பகுதியில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பர் 30-ம் தேதி (இன்று) பிற்பகல் புயலாக கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 5-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (‘ரெட் அலர்ட்’) பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (டிச.1) நீலகிரி, கோவை திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.2, 3-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
» மற்ற மொழிகளையும் மதிப்பவரே சான்றோர்
» மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள்
தரைக்காற்று எச்சரிக்கை: வடதமிழக கடலோரம், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் 50-60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று முழுவதும் 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் (ஆட்சியர் அலுவலகம்), மெரினா (டிஜிபி அலுவலகம்), கத்திவாக்கத்தில் 6 செ.மீ., தண்டையார்பேட்டை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், நந்தனம், நுங்கம்பாக்கம், திருவொற்றியூரில் 5 செ.மீ., தரமணி, ஐஸ் ஹவுஸ், மாதவரம், எண்ணூர், கொளத்தூர், மணலி, ராயபுரம், பெரம்பூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தயார் நிலையில் அரசுத் துறைகள்: இதற்கிடையே, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கனமழையை எதிர்கொள்ள தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்திஉள்ளார். நானும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர், நாகை மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களை சேர்ந்த 471 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் 1,193 ஜேசிபி இயந்திரங்கள், 806 படகுகள், 977 ஜெனரேட்டர்கள், 1,786 மர அறுப்பான்கள், 2,439 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. முதல்வர் உத்தரவின்படி ஏற்கெனவே, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 1 குழு, மாநில பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், விழுப்புரத்துக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகளின் தலா 1 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீன்பிடிக்க சென்ற 4,153 படகுகள் கரை திரும்பியுள்ளன. அனைத்து துறையினரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மேலாண்மை இயக்குநர் மோகனசந்திரன் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago