சென்னை: “சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயல் காரணமாக, கடலோர மாவட்டங்களில் காற்றின் தாக்கமும் இருக்கும், மழையின் தாக்கமும் இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார் .
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறிய: “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது சனிக்கிழமை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக, அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, விழுப்புரம்,
செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை நவ.30-ம் தேதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
» நடிகை கவுதமி தொடர்ந்த நில மோசடி வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன், தம்பதிக்கு மறுப்பு
» கணவருடன் ரம்யா பாண்டியன் போட்டோஷூட் - கவனம் ஈர்க்கும் க்ளிக்ஸ்
இன்று முதல் நாளை வரை வடதமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். சனிக்கிழமை புயல் கரையைக் கடக்கின்றபோது, சூறாவளிக் காற்றானது மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில், மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்.1ம் தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், பதிவான மழையின் அளவு 351 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 350 மீ.மீ. இது இயல்பை ஒட்டியுள்ளது.
எந்தவொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது தாழ்வு மண்டலம் வலுபெறக்கூடும் வேண்டுமெனில், வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேற்பகுதியில் விரிவடைதல், நடுப்பகுதியில் செல்லக்கூடிய காற்றின் ஈரப்பதம் என பல்வேறு காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும். கடந்த நவ.26 முதல் நவ.27-ம் தேதி வரையில், இவையெல்லாம் அதிகரித்திருந்தது. நவ.28-ம் தேதி, இவை குறைந்தன. அதன்பிறகு, கீழ்ப்பகுதியில் காற்று குவிதல் அதிகரித்துள்ளது. அதேபோல், வளிமண்டலத்தின் மேல்பகுதியில் காற்று விரிவடைதலும் தொடர்ந்து நிலைப்பெற்றிருந்தது.
காற்று முறிவு இந்தப் பகுதியில் நேற்று முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் குறையத் தொடங்கியுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் இலங்கையை நோக்கிச் சென்றபோது, அதன் வேகம் குறைந்து இலங்கை அருகில் பெருமளவு நிலை கொண்டிருந்தபோது, பெருமளவு மழை பெய்தது. இதனால் அதன் சக்தி குறைந்திருந்தது. ஈரப்பதமும் குறைந்திருந்தது. பிறகு அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியது. தற்போது அது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்ல தொடங்கியபோது, அதனுள் காற்று குவிதலும், ஈரப்பதம், விரிவடைதலும் அதிகமானது. இதனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலாக வலுப்பெற்றுள்ளது.
கடலோர மாவட்டங்களில் காற்றின் தாக்கமும் இருக்கும். மழையின் தாக்கமும் இருக்கும். சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. அதைத் தொடர்ந்து கண்காணித்து புயல் அறிவிப்பு கூறப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். வாசிக்க > உருவானது ஃபென்ஜல் புயல் - தமிழகத்தில் அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago