கடந்த இரண்டு நாட்களாகவே புயல் போக்கு காட்டி வருவதுதான் பெரும் பேசுபொருளாக இருந்தது. ரெட் அலர்ட் விடப்பட்ட மாவட்டங்களிலும் கூட என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது என தெளிவற்ற சூழல் நிலவியது. இந்நிலையில்தான், வெள்ளிக்கிழமை மதியம் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உருவானது புயல்... - ”தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, “ஃபெஞ்சல்” புயலாக இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (30-ம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபென்ஜல் என பெயரிடப்பட்டுள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
போக்கு காட்டியதா ஃபெஞ்சல் புயல்? - இந்நிலையில், இந்தப் புயல் போக்கு காட்டியத? என்று ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ ( https://www.chennairains.com/ ) என்ற வலைப் பக்கத்தை நடத்திவரும் வானிலை ஆர்வலரும், ப்ளாகருமான ஸ்ரீகாந்திடம் முன்வைத்தோம். அதற்கு அவர், “ஃபெஞ்சல் புயல் சின்னம் நேற்றுமுன் தினம் இலங்கை நிலப்பரப்புக்கு அருகே இருந்தது. இலங்கை கரையின் அருகே அது அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. அதனால் அது வலுவிழக்கும் சூழல் உருவானது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் அது இலங்கை கரை அருகேயே கீழிருந்து மேலே நகர்ந்து கொண்டிருந்தது. மேலும் காற்றின் வேறுபாடு காரணமாகவும் அது வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டது.
ஆனால், வலுவிழந்த பின்னர் 6-ல் இருந்து 9 மணி நேரம் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று மாலை முதல் படிப்படியாக வடகிழக்கு திசையில் நகர்ந்து இலங்கை நிலப்பரப்புக்கு வெளியே வந்தது. இலங்கை நிலப்பரப்பிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் அது மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. அவ்வாறு வடகிழக்கு திசையில் நகர்ந்ததால் அதற்கு கூடுதலாக வலுப்பெறும் வாய்ப்பு கிடைத்து திரும்பவும் புயலாக மாறுவதற்கான சாதகமான சூழல் கிடைத்துவிட்டது. தற்போது புயலாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
» ‘பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!’ - பல்லடம் சம்பவத்தை முன்வைத்து அண்ணாமலை சாடல்
» உருவானது ஃபெஞ்சல் புயல் - தமிழகத்தில் அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை!
புயல் வலுவடைவதும், புயல் வலுவிழப்பதும் நேரியல் சமன்பாடுகள் போன்றது அல்ல. இதனை காலநிலை மாற்றத்தோடும் நேரடியாக தொடர்புபடுத்த முடியாது. வர்தா புயல் கரையைக் கடக்கும்போது வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அது கரையைக் கடக்கும்போது வலுவிழக்கவில்லை. சில புயல்கள் கணிப்பதை போல் அல்லாமல் கரையைக் கடக்கும் முன்னர் வலுவிழப்பதும் உண்டு.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம், கடல்பரப்பு மிகவும் வெப்பமாக இருப்பதால், கொஞ்சம் சாதகமான சூழல் கிடைத்தாலும் புயல்கள் வலுப்பெறுவதற்கான அடித்தளம் மிக எளிதாகக் கிடைத்துவிடுறது. பொதுவாக, வடகிழக்குப் பருவமழை காலத்தில் 3-ல் இருந்து 5 காற்றழுத்த தாழ்வு நிலைகளோ அல்லது ஒரு புயலோ உருவாவது இயல்பானதாகவே இருக்கிறது. சில சமயங்களில் புயல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகிறது. அதன்படி, இந்தமுறை இந்த ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு... - இதற்கிடையில் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும், புதுச்சேரி பகுதியில் மாலை தொடங்கி மழையின் வேகம் அதிகரிக்கும். இரவில் மேலும் அதிகரிக்கும். இந்தப் புயலானது கேடிசிசி பகுதிக்கும், புதுச்சேரிக்கும் அதி கனமழை தரப்போகிறது. குறிப்பாக நாளை (சனிக்கிழமை) மிகுந்த எச்சரிக்கை தேவை. ஞாயிறும் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று கணித்துள்ளார்.
இதற்கு மேல் சொன்னால்... கூடவே, “இதற்கு மேல் சொன்னால் ஹைப் என்றொரு கூட்டம் வரும். இந்த நாட்டில் நல்லது சொன்னாலும் யோசிச்சுதான் சொல்லணும் போல. என்னை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், என்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின் தொடர்பவர்களுக்கானது இந்தப் பதிவு. மற்றவர்கள் கடந்து செல்லலாம். இந்தப் புயல் சின்னமானது சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மழையை கொட்டித் தீர்க்கப் போகிறது. அதனால் கவனமாக இருங்கள். நேற்றைய இரவு ஒரு சிறிய மேகக் கூட்டம் 50 முதல் 60 மில்லிமீட்டர் மழையைத் தந்தது. ஃபெஞ்சல் புயலைப் பொறுத்தவரை எனது பார்வை ஆரம்பத்திலிருந்தே நிதானமாக இருந்துள்ளது. நான் இதை சரியாகக் கணித்தேனா இல்லையால் என்பதை உறுதி செய்து, அதில் பெருமிதம் கொள்வதற்கான தருணமில்லை.
அண்மைக்கால அவதூறுகள் என்னை எனது கணிப்புகளை இன்னும் ஆணித்தரமான சொல்ல வைக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தப் புயல் ஆரம்பத்தில் இருந்தே கணிப்பதற்கு கடினமான ஒன்றாகவே இருக்கிறது. எனது திறமைகள், அனுபவங்களைப் பயன்படுத்தி கணித்துள்ளேன். இது எப்படி மாறுகிறது என்று பார்ப்போம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நல்ல மழை பெய்வதைப் பார்க்கும்போது மற்ற மோசமான நிகழ்வுகள் மறந்துவிடுகின்றன” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த பிரதீப் ஜான், (அப்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே ஃபெஞ்சல் நிலவியது.) “இந்த அமைப்பின் மூலம் நல்ல மழையை எதிர்பார்க்கிறோம். இது மட்டுமே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மண்டலத்தில் ஏரி, குளங்களை நிரப்பக் கூடும். அதன் பின்னர் டிசம்பரில் உருவாகும் புதிய அமைப்புகள் கடலூர், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் பகுதிக்கு வேண்டுமானால் மழைப் பொழிவைத் தரலாம். டிசம்பர் இறுதியில் தென் தமிழகத்தில் மழை வாய்ப்புள்ளது” என்று கூறியிருந்தார்.
கணிப்புகள் தவறுவது ஏன்? - அதேபோல் வானிலை கணிப்புகள் ஏன் சில நேரங்களில் துல்லியமாக இல்லை என்பது பற்றியும் அந்த வீடியோ பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அதற்கு அண்மையில் ராமேஸ்வரத்தில் திடீரென பெய்து 362 மில்லி மீட்டர் மழையளவை சுட்டிக் காட்டினார். “உண்மையில், அனைத்து தரப்பிலிருந்தும் ராமேஸ்வரத்தில் 50 மில்லி மீட்டர் அளவு மழை பெய்யலாம் என கணிப்புகள் வெளியாகின. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அங்கு வெகு சில மணி நேரத்தில் 362 மிமீட்டர் அளவு மழை பெய்தது. இதுபோன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலைகளைக் கணிக்கும்போது அது எந்தெந்த மண்டலத்தில் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று கணிப்பது எளிது. ஆனால் குறிப்பிட்டு ஓரிடத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று துல்லியமாக சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. காற்றின் போக்கு, அது எப்படி குவிகிறது பொறுத்தே அதனை அதன் போக்கிலேயே சென்று தான் கணித்துச் சொல்ல முடியும்” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், “கடந்த 3 ஆண்டுகளாகவே மேக வெடிப்பு அல்லது காற்றின் குவிதல் ஒரே இடத்தில் மிக நீண்ட நேரமாக நீடிப்பதால் ஒரே இடத்தில் மழை கொட்டித் தீர்ப்பது, மிக்ஜாம் புயலைப் போல் கடற்கரைக்கு பக்கவாட்டில் மெதுவாக அடர்த்தி குறையாத மேகக் குவியல்களுடன் பயணித்து கரையைக் கடப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அதனால் தான் என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் இது போன்ற அமைப்புகள் கடலில் உருவாகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அதனை அணுகுகிறோம். தூத்துக்குடியில் பெய்த பெருமழையெல்லாம் வெறும் மேலடுக்கு சுழற்சியால் நிகழ்ந்தது. காயல்பட்டினம் நிகழ்வும் அதேபோன்றதுதான். ஆகையால் இனி வரும் காலங்களில் இது போன்ற காற்றழுத்த நிலைகளை அணுகுவதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது” என்றார்.
இதனிடையே, “சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. அதைத் தொடர்ந்து கண்காணித்து ஃபெஞ்சல் புயல் அறிவிப்பு கூறப்பட்டுள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அதன் விவரம்: ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது தாக்கம் எப்படி இருக்கும்? - பாலச்சந்திரன் விவரிப்பு
நவம்பர், டிசம்பர் என்றாலே..! - வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவாவது சமீப காலமாக வழக்கமான நிகழ்வாகிவிட்டது. கடந்தாண்டு மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டது. 2015 பெருமழைக்குப் பின்னரே சென்னை மக்கள் ஒவ்வொரு பருவமழைக் காலத்தையும் பீதியுடனேயே எதிர்நோக்குகின்றனர். எந்த ஆப் இருக்கிறதோ இல்லையோ போன்களில் வெதர் ஆப்களை நிறுவிக் கொள்கின்றனர். மழை அறிவிப்பு வந்தால் முன்னெச்சரிக்கையாக ஒரு மேம்பாலத்தை பார்க்கிங் லாட்டாக மாற்றிக் கொள்கின்றனர். பேனிக் பையிங் கலாய்க்கப்பட்டாலும் கூட முந்தைய காயங்களால் கொஞ்சம் அதிகமாகவே வாங்கி சேமித்துக் கொள்கின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய் வேளச்சேரியில் குறிப்பிட்ட ஒரு பகுதிவாசிகள் தங்கள் பகுதிக்கென சொந்தமாக இரண்டு ரப்பர் படகை வாங்கி வைத்து செய்தியில் ஃப்ளாஷ் ஆகியுள்ளனர்.
எத்தனை முன்னெச்சரிக்கைகள் இருந்தாலும் சில நேரங்களில் மழைப்பேற்றை யாரும் கணிக்க முடியாது என்ற கிராமத்து சொலவடை போல் கணிப்புகள் தவறிப் போய்விடுகின்றன. எத்தனையோ செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் கூட துல்லியமாக இதோ இப்படித்தான் இவ்வளவு தான் மழை பெய்யப் போகிறது. இங்கே தான் புயல் கரையைக் கடக்கப் போகிறது என்ற கணிப்புகளுக்கு சில புயல் அமைப்புகள் சவால் விட்டுவிடுகின்றன. அப்படி சவால்விட்ட புயல்களில் ஒன்று தான் இந்த ஃபெஞ்சல் (முன்பு ஃபெங்கல்). இந்தப் பெயர் அறிவித்ததிலிருந்து மீம்ஸுக்கு பஞ்சமில்லை. ’ஃபெங்கல் புயலே எங்களுக்குப் பொங்கல் வரை லீவு தருவாயா’ எனத் தொடங்கி ‘சென்னையில் ஓர் ஊட்டி’ என்ற சிலாகிப்புகள் வரை சமூக ஊடகங்களில் களைகட்டியன.
மற்றொருபுறம் என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப் எல்லாம் தயார்நிலையில் இருக்க, “இல்லை இல்லை ‘தற்காலிக புயலாக’ உருவாகி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும்” என்றே இன்று (நவ.29) காலை வரை சொல்லப்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. இதோ, எண்ணூர், காட்டுப்பள்ளியில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கணிப்புகளுக்காக காத்திருக்காமல் எப்போதும் தயார் நிலையில் இருப்பது மட்டுமே பெருமழையை, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள சிறந்த விதமாக இருக்க முடியும். | வாசிக்க > உருவானது ஃபென்ஜல் புயல் - தமிழகத்தில் அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago