சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும், 7 மாவட்டங்களில் நாளையும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதுதற்போது இலங்கை திரிகோணமலைக்கு வடகிழக்கே 200 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 470 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது விரைவில் வடக்கு திசையில் நகர்ந்து வெள்ளிக் கிழமை காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுப்பெற்று இருக்கும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும். அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கரையோரம், மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நவ.30-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதன் காரணமாக டிச.2-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 3, 4-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (‘ரெட் அலர்ட்’), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
» பிஎஸ்இ சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிவு: அதானி குழும நிறுவன பங்குகள் உயர்வு
» பெங்களூருவில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட லஷ்கர் தீவிரவாதி ருவாண்டாவில் கைது
7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: நாளை (நவ.30) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (‘ரெட் அலர்ட்’), ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 1-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழையும், 2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, கோடியக்கரை, திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 5 செ.மீ., திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், சீர்காழியில் 4 செ.மீ. மழை பதிவாகி
உள்ளது.
பலத்த தரைக்காற்று: வடதமிழக கடலோரம், அதை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். இன்று மாலை முதல் நாளை பிற்பகல் வரை அதிகபட்சம் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
30-ம் தேதி வரை தமிழக, ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago