சென்னை: “அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியைச் சேர்ந்தவர் சி.செல்வராணி. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இவர், புதுச்சேரி யூனியன்பிரதேச அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்வராணி, தனது தந்தை இந்து பட்டியலினத்தவர் என்பதால், தனக்கும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்கக் கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி அரசு அதிகாரிகள் நிராகரித்தனர்.செல்வராணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது.
செல்வராணி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மாறுவது என்பது அதன் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையான நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதற்காக மட்டும், மதம் மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற மறைமுக நோக்கங்கள் இடஒதுக்கீட்டு கொள்கையையே கேலிக்கூத்தாக்கிவிடும்.
மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும்போது, அரசு வேலைவாய்ப்புக்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்த முற்படுவதை ஏற்க முடியாது. மேலும் அது அரசியலமைப்பு சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம்’ என தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய குடிமகன்கள் யாரும், எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதை நமது அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
ஒரு மதத்தின் மீது உண்மையாகவே பிடிப்பு ஏற்பட்டு ஒருவர் மதம் மாறினால் அவரை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மதமாற்றங்கள் இயல்பாக நடப்பதில்லை. இந்தியாவில் இந்து மதத்தினரை மட்டும் குறி வைத்து மத மாற்றங்கள் நடத்தப்படுகின்றன. ‘சேவை’ என்ற பெயரில் தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, மதமாற்றத்தையே முழு நேர தொழிலாக செய்யக்கூடிய நிறுவனங்கள் இங்கே ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி குவிகிறது. இவர்கள் இந்து மதத்தை இழிவு படுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றி இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். அப்படி மதம் மாற்றப்பட்டவர்களை கொண்டே, மதமாற்றத்தை தீவிரமாக மேற்கொள்கின்றனர். இந்தியாவில் மதமாற்ற முயற்சியை எதிர்கொள்ளாத ஒரு இந்து கூட இருக்கவே முடியாது. வாழ்நாள் முழுவதும் மத ஒற்றுமையை வலியுறுத்திய மகாத்மா காந்தி, தனது சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற நடந்த முயற்சிகளை விவரித்து எழுதி இருக்கிறார்.
இன்று வரையிலும் இந்து கடவுளை சாத்தான் என்று கூறி மதம் மாற்றுவதற்காக வீடு வீடாக வந்து கொண்டே இருக்கின்றனர். இப்படி மோசடியாக ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுபவர்கள் முதலில் இந்து மதத்துக்கும், பிறகு நாட்டுக்குமே எதிரியாகி விடுகின்றனர். சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தனி நாடு கேட்கும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் மதமாற்றத்தை பாஜகவும், இந்து அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்து மதத்தில் சாதி வேற்றுமைகள் இருப்பதால்தான் பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தில் சாதி வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் பாதிக்கப்படுபவர்களை கை தூக்கி விடுவதற்காகவே இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.
ஆனால், ‘எங்கள் மதத்தில் சாதிகளே இல்லை’ என்று கூற மதம் மாற்றுபவர்கள் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மதம் மாறி பல பத்தாண்டுகள் ஆனவர்கள் கூட, இந்து பட்டியலினத்தவர் என்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
அரசு வேலைகளில் மட்டுமல்லாது, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர்களுக்கான இடங்களில், மதம் மாறியவர்கள் போலிச் சான்றிதழ் பெற்று போட்டியிடுகின்றனர். இதனால், உண்மையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மேயர் தேர்தலிலும், பல்வேறு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் மீது சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தின் இடஒதுக்கீடு முறையாக பட்டியலின மக்களுக்கு போய் சேருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இது நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களில் சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago