தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு: டெல்டாவில் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் / சென்னை: டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை, டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள், 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிர்கள், நாகை மாவட்டத்தில் 5,800 ஏக்கர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 12 ஏக்கரில் வெற்றிலை தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட மழை குறித்த முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 530 கிமீ தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று (நவ.28), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (நவ.29) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாகையில் 19 செ.மீ. மழை: நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 19 செ.மீ., கோடியக்கரை, வேளாங்கண்ணியில் 18 செ.மீ., திருப்பூண்டியில் 14 செ.மீ., சென்னை மணலி, திருக்குவளையில் 13 செ.மீ., வேதாரண்யத்தில் 12 செ.மீ., மாமல்லபுரம், செய்யூர், தலைஞாயிறு, சீர்காழி, தரங்கம்பாடி, சென்னை கத்திவாக்கம், மரக்காணம், கடலூர் மாவட்டம் வடகுத்து பகுதிகளில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை: தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். 29, 30-ம் தேதிகளில் வட தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளில் வரும் 29-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அதிகபட்சமாக 3.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும் என இன்காய்ஸ் (INCOIS) எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்