சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 830 கிமீ தொலைவிலும் நிலவுகிறது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையில் வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையில், “தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவித்தது.
குறிப்பாக, 26.11.2024 அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், 27.11.2024 அன்று கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப் பொழிவு ஏற்படக் கூடும். எனவே, கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 22.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய தேதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
» ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: பா.ரஞ்சித்தின் அமைப்பை தடை செய்ய கோரும் இந்து மக்கள் கட்சி
» கனமழை: நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மீனவர்களுக்கு எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன. மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள்... தமிழக முதல்வர் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ஜானி டாம் வர்கீஸ், (94999 56205, 88006 56753), மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கவிதா ராமு, (90032 97303), * திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், (73388 50002), * கடலூர் மாவட்டத்துக்கு எஸ்.எ. ராமன், இ.ஆ.ப., (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
தயார் நிலையில் மீட்பு பேரிடர் மீட்புப் படை.. மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர, தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பின்வரும் எண்களில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்
*மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 வாட்ஸ் அப் 94458 69848
*மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்
*நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 வாட்ஸ் அப் 84386 69800
*மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588
*திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 வாட்ஸ் அப் 94885 47941
*கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 94899 30520
பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விவசாய பெருமக்கள், பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்துமாறும் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago