மதுரை: மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மேலிடப் பார்வையாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை முன்பு, செல்லூர் ராஜூ மற்றும் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மதுரை மாநகர மாவட்டத்தில் மதுரை தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் மத்திய சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கள ஆய்வுக் கூட்டம், காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக, துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை கலந்து கொண்டனர்.
மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசுகையில், ”எம்ஜிஆரை சினிமாவிலும், அரசியலிலும் யாரும் வெல்ல முடியவில்லை. அவருக்கு பிறகு அவரது நிழலாக மனைவியாக இருந்த ஜானகிக்கு பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ளார். இந்த விழா எழுச்சியாகவும், உணர்ச்சியாக நடந்தது. அடுத்து அதிமுக ஆட்சி மலர, கள ஆய்வு நடத்தப்படுகிறது.
கள ஆய்வுக்கு முன்னோட்டமாக நத்தம் விஸ்வநாதன், செம்மலை நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்பார்கள். நீங்கள் ஒவ்வொருவராக, வெற்றி பெற என்ன செய்யலாம், உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த ஆய்வுக் கூட்டம் சிறப்பாக நடந்தது என்று இங்கு வந்திருக்க நத்தம் விஸ்வாநாதனும், செம்மலையும் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
» அயோத்திக்குப்பத்தில் மாற்றுக் கட்சியினர் மீது தொடர் தாக்குதல்: நடவடிக்கை கோரும் பாஜக
» புயலாக மாறுமா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், ”கள ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம், இக்கூட்டத்தில் சில தரவுகளை பெற்று பொதுச் செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான். இதுபோல், ஒவ்வொரு குழுக்களும் தமிழகம் முழுவதும் சென்று, அறிக்கையாக பொதுச் செயலாளரிடம் தாக்கல் செய்ய உள்ளோம். அதன் அடிப்படையில், மதுரை மாநகர் மாவட்டத்தில் நடக்கும் கள ஆய்வில், தேவைப்படுகிற சில விவரங்களை பெற உள்ளோம்.
இதுவரை மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள், திருப்திகரமாக இருக்கிறதா? தலைமை கழகம் அறிவித்த போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் முறையாக நடந்துள்ளதா? கட்சி நிர்வாகிகள் தவறாமல் வந்துள்ளனரா?, பூத்து கமிட்டி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்கிறோம். செயல்படாதவர்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தை பொறுத்த வரையில் எள் என்றால், எண்ணெயாக நிற்கக் கூடியவர்கள் என்பது தெரியும்.
சிறப்பாக செயல்படக் கூடிய நிர்வாகிகள், தொண்டர்கள், ஆற்றல் மிகுந்த மாவட்டச் செயலாளர் உள்ளார். அதனால், எல்லாம் முறையாக நடந்து இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும், இங்கே அறிக்கை தாக்கல் செய்வதற்காக சில தகவல்களை பெற வந்துள்ளோம். பூத் அளவிலான கமிட்டி, வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது சிறப்பாக நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்கிறோம்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக எப்படியும் வெற்றிப்பெற்றாக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை இப்போது இருந்து நாம் திட்டமிட்டு களப் பணியாற்ற வேண்டும். பகுதி வாரியாக நிர்வாகிகள் சில ஆலோசனைகளை தெரிவிக்கலாம். அதற்காக குற்றம், குறைகளை தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் இந்த கூட்டத்தின் நோக்கம் திசை திரும்பிவிடும்” என்று நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
அதன்பின் முன்னாள் அமைச்சர் செம்மலை, பகுதி வாரியாக நிர்வாகிகளை கருத்துகளை கேட்டு கள ஆய்வை தொடங்கினார். அவர் பேசுகையில்,"சில பேர் சொல்வார்கள், சில பேர் செயல்பாடுவார்கள். செயல் வீரராக உங்களுக்கு மாவட்டச் செயலாளராக செல்லூர் ராஜூ கிடைத்துள்ளார்" என்றார். இப்படி அவர் சொல்லும்போதே, நிர்வாகிகள் கூட்டத்தில் கைதட்டலும், ஒரு சிலர் தங்கள் அதிருப்திகளையும் தெரிவித்தனர். ஆனாலும், வெளிப்படையாக எழும்பி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து செம்மலை பேசுகையில், "பகுதி வாரியாக செயலாளர்களை அழைத்து விவரங்கள் கேட்கிறோம். மீண்டும் வார்டு கிளைகள், பகுதி கிளைகள் தாண்டி தற்போது ‘பூத்’ கிளைகள் அமைக்க பணியை சொல்லியிருக்கிறார்கள். ‘பூத்’ கிளைகள் அமைப்பதால், பகுதி கிளை செயலாளர் அதிகாரம் குறைக்கப்படும், மரியாதை போய்விடும் என்று அர்த்தம் இல்லை. பகுதி கிளை செயலாளர்கள் தான் கட்சியின் ஆணிவேர், அச்சாணி. உங்களுக்கு உதவியாக தேர்தல் நேரத்தில் பணியாற்றவே இந்த ‘பூத்’ கிளை அமைக்கப்படுகிறது” என்றார்.
அதன் பிறகு, அனுமதி வழங்கப்பட்ட பகுதி செயலாளர்களிடம் மட்டம், அவர்கள் பெயரை சொல்லி முன்னாள் அமைச்சர் செம்மலை, கருத்துகளை கேட்டறிந்தார். அவர்களும் செம்மலை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். கூட்டம் சுமுகமாக முடியும் தருவாயில் திடீரென்று பைக்காரா செழியன், பீபீகுளம் ராமச்சந்திரன், முனிச்சாலை சரவணன் உள்பட சிலர் மேடையேறி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஒரு மனுவை வழங்கினர். மேலும், கள ஆய்வுக்கூட்டத்தில் தங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அங்கிருந்த செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள், பல கட்சிக்கு போய் வந்துவிட்டு கருத்து சொல்ல வந்துவீட்டீர்களா? என எச்சரித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரை தாக்கி கொண்டனர். செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள், இந்த தகராறுக்கு மதுரை மக்களவை வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் சரணவன் தான் காரணம் என்று கோஷமிட்டதோடு, அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றும்படி கோஷமிட்டனர். எதிர்பாராத இந்த தள்ளுமுள்ளும் அடிதடியால் கூட்டத்தில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
மாநகராட்சி எதிர்க்கட்சி துணைத் தலைவர் சோலை ராஜா, “யார் வேண்டுமென்றாலும் பேசலாம், மாவட்ட கழகம் பதில் சொல்லாம், ஆனால், திட்டமிட்டு கூட்டத்தில் தகராறு செய்ய நினைக்காதீர்கள்” என்று எச்சரித்தார். தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், செல்லூர் ராஜூ எதிர்ப்பாளர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். மேடையில் இருந்த செல்லூர் ராஜூ, அருகில் இருந்த டாக்டர் சரவணனிடம், “நேருக்கு நேராகவே இதுவெல்லாம் உன் வேலை தானப்பா” என்றார்.
அதற்கு சரவணன், இல்ல அண்ணா என்று சமாளித்தபோது, செல்லூர் ராஜூ ‘தெரியும்மப்பா எல்லாம்’ என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் டாக்டர் சரவணனும் மேடையை விட்டு கீழே இறங்கினார். அதன்பின் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்தனர்.
நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், ”அதிமுக கள ஆய்வில் எந்த மோதலுமில்லை. எந்த பிரச்சினையும் இல்லை. சில நிர்வாகிகள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார்கள். பேசுவதற்கு வாய்ப்பை தரும்படி கூறினோம். ஆனால், திட்டமிட்டு சிலர் பிரச்சனை ஏற்பட்டது போன்ற மாயதோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர்” என்றனர்.
டாக்டர் சரவணன் என்ன சொல்கிறார்? - டாக்டர் சரவணன் பேசுகையில், "கருத்து சொல்ல வந்தவர்கள் அதிமுககாரர்கள் தான். சும்மா செல்லூர் ராஜூ, அவர்களை வேறு கட்சிக்காரர்கள் மாதிரி சொல்கிறார்கள். அவர்கள், செல்லூர் ராஜூக்கு கீழ் பணி புரிந்தவர்கள். செழியனும், ராமச்சந்திரனும், சிறப்பாக தேர்தல் பணியாற்றியதிற்காக கட்சிப் பாராட்டு பெற்றவர்கள். கட்சியோட உண்மை நிலையை சொல்ல வந்ததை பொறுக்க முடியாமல் அவர்கள் என்னோட ஆதரவாளர்கள் என்று பிரச்சனையை வேறுமாதிரி கொண்டு போக பார்க்கிறார்.
கள ஆய்வு என்று சொல்லிவிட்டு ‘மேட் பிக்சிங்’ செய்வதுபோல் செல்லூர் ராஜூ, அவருக்கு வேண்டியவர்களை பேச வைக்கிறார். மதுரை மக்களவை தொகுதியில் 1,666 ‘பூத்’கள் உள்ளன. வெறும் 113 ‘பூத்’களில் மட்டுமே, அதிமுக முன்னிலை பெற்றிருந்தது. செல்லூர் ராஜூ மாவட்டத்திற்குட்பட்ட 966 ‘பூத்’களில் 67 பூத்களில் வெறும் 10 வாக்குகள் முதல் 30 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இது மாநகரத்தில் அதிமுக பலமிழந்ததை தான் காட்டுகிறது. அதை கள ஆய்வுக் கூட்டத்தில் சொல்ல விடாமல் செல்லூர் ராஜூவும், அவரது ஆதரவாளர்களும் தடுக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ‘அம்மாவாசை’யாக மாறிவிடுவேன் என்று கூறினார்.
திரைமறையில் என்னை ஜெயிக்கவிடக் கூடாது என்பது போலவே அவரது செயல்பாடுகள் இருந்தது. கள ஆய்வுக் கூட்டத்துக்கு வெளியே போய் பார்த்தால்தான் தெரியும், மாநகர அதிமுகவின் உண்மை நிலை. அதை அடிமட்ட தொண்டன் பேச வந்தால் அடிங்கடா என்று செல்லூர் ராஜூ சொல்கிறார். இவரது தலைமையில் மதுரை மாநகர அதிமுக ’பின்னனோக்கி’தான் சென்று கொண்டிருக்கிறது. அதிமுககாரர்கள் எல்லோருக்கும் 2026 தேர்தலில் கட்சி ஜெயிக்க வேண்டும், மீண்டும் பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதான் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கான கருத்துகளை சொல்லவிடாமல் செல்லூர் ராஜூ மறுக்கிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago