புதுச்சேரி அரசியலில் தடம் பதிக்கும் லாட்டரி மார்ட்டின் மகன்! - வரிந்து கட்டி விழா எடுக்கும் பாஜக எம்எல்ஏ-க்கள்

By செ.ஞானபிரகாஷ்

தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி கரன்சி கட்டுகளை அள்ளிக் கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில், பாஜக மற்றும் அதன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சிலர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை அழைத்து வந்து விழா எடுத்திருக்கிறார்கள். இங்கு மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா விசிக-வில் இருந்து கொண்டு அதிரடி கிளப்பி வரும் நிலையில் புதுச்சேரியில் மார்ட்டின் மகன் களமிறங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை யாரையும், இவர் இந்தக் கட்சிதான் என அக்மார்க் முத்திரை குத்திவிட முடியாது. ஏனென்றால், போகிற போக்கில் காருக்​குள்ளேயே கரைவேட்டியை மாற்றிக் கொண்டு கட்சி மாறுவது புதுச்சேரி அரசியல் வாதிகளுக்கு பழகிப்போன சமாச்​சாரம்.

இப்படித்தான் கடந்த முறை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜான்கு​மாரும் அவரது புதல்வர் ரிச்சர்டும் பாஜகவுக்கு தாவி அங்கும் எம்எல்ஏ ஆனார்கள். முன்பு, நாராயணசாமி முதல்​வ​ராவதற்காக தனது எம்எல்ஏ பதவியை தியாகம் செய்த ஜான்கு​மார், பிற்பாடு கட்சி மாறி அதே நாராயணசாமி பதவி இழக்கவும் காரணமானவர்.

ஜான்குமார் தனது தொகு​திக்​குட்பட்ட வாக்காளர்கள் பற்றிய டேட்டாவை அப்டேட்டாக வைத்திருப்​பார். இதற்காகவே தனி அலுவலகத்தை திறந்து வைத்திருப்​பவர், அடிக்கடி தொகுதி மக்களுக்கு பரிசுகளையும் வாரி வழங்கி குஷிப்​படுத்துவார். இப்போது நெல்லித்தோப்பில் ரிச்சர்ட்டும், காமராஜர் நகரில் ஜான்கு​மாரும் எம்எல்​ஏ-க்களாக உள்ளனர்.

இந்த நிலையில், தனது தொகுதியில் பொதுத்​தேர்வில் வெற்றி​பெற்ற மாணவர்​களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை வைத்து நடத்தி இருக்​கிறார் ஜான்கு​மார். தமிழகத்தில் மார்ட்டினுக்கு எதிரான அமலாக்​கத்துறை ‘அட்டாக்’ நடந்துகொண்டிருந்த போது இந்த நிகழ்வு நடந்திருப்பது தான் ஹைலைட்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்எல்​ஏ-வானரிச்சர்ட், “எனது தந்தையை விட ஒரு படி மேலாக சார்லஸ் வந்துள்ளார். என் தந்தை செய்ததை விட பல மடங்கு இத்தொகுதிக்காக அவர் செய்வார். விரைவிலேயே மிக முக்கியமான பொறுப்​புக்கு அவர் வரவுள்ளார்” என்றார்.

புதுச்சேரி அரசியலில் அடியெடுத்து வைக்கிறீர்களா? என சார்லஸ் மார்ட்​டினிடம் கேட்டதற்கு, “புதுச்​சேரிக்கு விழாவுக்காக வந்தேன். அரசியல் பற்றிய கேள்விக்கு இப்போது பதில் இல்லை. நேரம் வரும்போது சொல்​கிறேன்” என்றார். ஏற்கெனவே ஜான்குமார் லாட்டரி தொழிலில் இருந்​தவர். லாட்டரி மார்ட்​டினுடன் அப்போது அவருக்கு நல்ல பழக்கம்.

அந்த பழையபாசத்தில் தற்போது மார்ட்டின் மகனுடனும் கைகோத்​துள்ளார் என்கின்​றனர். அதுசரி, பாஜக எம்எல்​ஏ-க்கள் இவ்வளவு வெளிப்​படையாக மார்ட்டின் வாரிசை அழைத்து வந்து விழா நடத்த என்ன காரணம் என பாஜக வட்டாரத்தில் விசாரித்தால், “புதுச்சேரி பாஜக எம்எல்​ஏ-க்கள் 6 பேரில் ஒருவர் பேரவைத்​தலை​வ​ராகவும் 2 பேர் அமைச்​சர்​களாகவும் உள்ளனர். ஜான்குமார் தனக்கும் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி​னார்; கிடைக்க​வில்லை.

இன்னொரு பக்கம் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்​சைகள் வாரியத் ​தலைவர் பதவிகளைக் கேட்டு தலைமையை நெருக்​கினர். அதுவும் கிடைக்​காததால் அவர்களுக்கும் அதிருப்தி. இந்த நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்​பாட்டை மறைமுகமாக உணர்த்தவே இந்த விழாவை நடத்தி இருக்​கிறார்கள். கட்சித் தலைமை என்ன செய்யப்​போகிறது என்று பார்ப்போம்” என்கின்​றனர். மார்ட்டின் மகனை வைத்து பாஜக எம்எல்​ஏ-க்கள் விழா நடத்தி இருப்பது பாஜக மேலிடத்​தையும் சற்று யோசிக்​கத்தான் வைத்துள்ளது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்