பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்டவிரோதமாக பணி நீக்கி, பழிவாங்கத் துடிப்பதா? என்றும் துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கி. பிரேம்குமாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டத்தில் துணைவேந்தரால் முன்மொழியப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் பலமுறை குட்டு வாங்கினாலும் பழிவாங்கும் போக்கை பல்கலைக்கழக நிர்வாகம் இன்னும் கைவிடாதது கண்டிக்கத்தக்கது.

உதவிப் பேராசிரியர் பிரேம்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று துணைவேந்தர் துடிப்பது சட்டரீதியாகவும், தார்மிக ரீதியாவும் தவறு ஆகும். முதலாவதாக பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பொருள் நிரலை பொதுவெளியில் கசிய விட்டது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட அவர் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டன.

இரண்டாவதாக, பிரேம்குமாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 06.11.2023 அன்று நடைபெற்ற 114-ஆம் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டது. அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற 116-ஆம் ஆட்சிக்குழுவிலும் முன்மொழிந்தது பல்கலைக்கழக சாசன விதிகளுக்கு எதிரானதாகும்.

ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் விவாதிக்கப்பட்டால், கடும் எதிர்ப்பு எழும்; தீர்மானம் மீண்டும் தோற்கடிக்கப்படும் என்பதாலேயே அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல், ‘நான் எனது முடிவை கூட்டக்குறிப்பாக சுற்றுக்கு விடுகிறேன், உறுப்பினர்கள் தனது கருத்தை அதில் பதிவிட்டு திருப்பி அனுப்புங்கள்’ என்று துணைவேந்தர் கூறியிருக்கிறார்.

இதுவும் தவறு ஆகும். ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கடி கொடுத்து உதவிப் பேராசிரியரின் பணி நீக்கத்திற்கு ஒப்புதல் பெறுவது தான் துணைவேந்தரின் திட்டம் ஆகும். மிக முக்கியமான ஆட்சிக்குழு கூட்டத்தில் அரசுப் பதவி வழி உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் பங்கேற்காமல் இருந்தது துணைவேந்தரின் அத்துமீறல்களுக்கு துணை போகும் செயலாகும்.

உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் 33 மாதங்களாகியும் அவர் மீதான பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படவில்லை; அவருக்கான பிழைப்பூதியமும் உயர்த்தப்படவில்லை. மாறாக, அவரை எப்படியாவது பணி நீக்கம் செய்து விட வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் துடிப்பது மனிதநேயமற்ற செயலாகும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகளுக்காக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்ததும், விசாரணை நடத்த ஆணையிட்டதும் வரவேற்கத்தக்கவை.

அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் புகார்கள், முறைகேடுகள், இட ஒதுக்கீடு விதி மீறிய பணி நியமனங்கள் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அவற்றை விசாரித்து அவை நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவர் பதவியில் நீடிக்க அனுமதிப்பது நியாயமல்ல.

எனவே, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தராகிய ஆளுநர் உடனடியாக தலையிட்டு, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்