அண்ணா பல்கலை.,யில் அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர் பணி நியமனம்: அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களும் முறையான வழிகளில், தகுதியும், திறமையும் உள்ளவர்களைக் கொண்டு, இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து காலமுறை ஊதிய விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் அல்லாத பணிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த குத்தகை முறை நியமனங்கள் இப்போது ஆசிரியர் பணிக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பது கேலிக்கூத்து என்பது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை குழி தோண்டி புதைக்கக்கூடியதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள நவம்பர் 20&ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில், இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி/ மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றால், மனிதவள முகமைகளிடமிருந்து குத்தகை முறையில் தான் பெற வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் டீன்கள், துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப உயர்கல்வி மீது நடத்தப்பட்டுள்ள நினைத்துப் பார்க்க முடியாத கொடிய தாக்குதல் ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமன முறை என்பது ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் போற்றப்படும் ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமன முறை தரத்தில் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களை தனியார் அமைப்புகளிடமிருந்து குத்தகை முறையில் பெறுவது மிக மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிலையான பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படும் போது, முதலில் அதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். அவை ஆய்வு செய்யப்பட்டு கல்வித் தகுதி, அனுபவம், பதிப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களை நேர்காணல் செய்யும் குழுவில் சென்னை ஐஐடி உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் இடம் பெற்று நேர்காணலுக்கு வருபவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறனை ஆய்வு செய்து மதிப்பெண்களை வழங்குவார்கள்.

அதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் பேராசிரியர்கள் தகுதியும், திறமையும் கொண்டவர்களாக இருப்பர். கல்வியிலும், ஆராய்ச்சிகளிலும் அண்ணா பல்கலைக்கழகம் சிறந்து விளங்கியதற்கும், இப்போதும் கூட, மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருப்பதற்கும், மற்ற தரவரிசைகளில் முதல் 20 இடங்களுக்குள் இருப்பதற்கும் அது தான் காரணம் ஆகும். ஆனால், குத்தகை முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தை தேடினாலும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகி விடும். இது நல்லதல்ல.

மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஆசிரியர்களை வாங்குவதென்பது மளிகைக்கடைகளில் இருந்து பொருட்களை வாங்குவதைப் போன்றது தான். ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை ஆசிரியர்கள் வேண்டும் என்ற பட்டியலை மனிதவள நிறுவனங்களிடம் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கினால், அவர்களை மனிதவள நிறுவனங்கள் அனுப்பி வைக்கும். அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்த கல்வித் தகுதி இருக்குமே தவிர, அவர்களின் பிற தகுதிகளையும், திறமைகளையும் பல்கலைக்கழகத்தால் ஒரு போதும் அளவிட முடியாது. அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் தான் வழங்கப்படும் என்பதால், தகுதியும், திறமையும் கொண்டவர்கள் தனியார் முகமைகள் மூலம் இந்தப் பணிகளுக்கு வர மாட்டார்கள்.

அத்தகைய சூழலில், தமிழகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகமான, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன், அமுல் நிறுவனர் குரியன் போன்றவர்களை உருவாக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் எந்த அளவுக்கு சீரழியும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. குத்தகை முறையில் பேராசிரியர்களை ஆசிரியர்களை நியமிப்பது என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழுக்கும், பெருமைக்கும் முடிவுரை எழுதும் செயல் என்பதில் ஐயமில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தினக்கூலி அடிப்படையிலான ஆசிரியர்களை குத்தகை முறையில் நியமிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. உயர்கல்வி மீது திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்திருந்தால் தற்கொலைக்கு சமமான இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள்.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை குத்தகை முறையில் நியமிப்பது என்பது கடந்த 2022&ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும். தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்தக் குழுவை 2022&ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை எண் 115 மூலம் தமிழக அரசு அமைத்திருந்தது.

தமிழக அரசின் டி பிரிவு பணிகளில் மட்டும் குத்தகை முறை நியமனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சி பிரிவு பணிகளுக்கும் அம்முறையை நீட்டிப்பது குறித்து பரிந்துரைக்க வேண்டியது அதன் பணிகளில் ஒன்றாகும். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அக்குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாகதாகவும், புதிய வரம்புகள் பின்னர் நிர்ணயிக்கப்படும் என்றும் 10.11.2022&ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், புதிய ஆய்வு வரம்புகள் அறிவிக்கப்படாத நிலையில், மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைக்கும் திட்டம் அறிமுக நிலையிலேயே முடங்கி விட்டது.

குத்தகை முறை நியமனங்களை டி பிரிவுக்கு மேல் நீட்டிப்பது குறித்து எந்த கொள்கை முடிவும் எடுக்கப் படாத நிலையில் ஏ பிரிவு பணியான பேராசிரியர் பணிக்கு குத்தகை முறையில் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக்கு யார் வழங்கியது என்பது தெரியவில்லை. இந்தக் கொடுமைகள் எல்லாம் முதலமைச்சருக்கோ, உயர்கல்வி அமைச்சருக்கோ தெரியுமா? என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

உயர்கல்வியின் தரத்தையும், சமூகநீதியையும் குலைக்கும் குத்தகை முறை ஆசிரியர் நியமனங்களை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குத்தகை முறையில் ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று அப்பல்கலைக்கழகத்தின் நிதிக்குழு கூட்டத்திலும், சிண்டிகேட் கூட்டத்திலும் எடுக்கப் பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களும் முறையான வழிகளில், தகுதியும், திறமையும் உள்ளவர்களைக் கொண்டு, இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து காலமுறை ஊதிய விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்