சென்னை: லண்டனில் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்திட்டங்களை வகுத்திருப்பதாகவும், குறிப்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை மேற்கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்துவிட்டு, நவ.28-ல் சென்னை திரும்புகிறார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, நவ.29-ம் தேதி சென்னை கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். நவ.30 மற்றும் டிச.1-ம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ‘இ’ அரங்கில் ‘வாய்ஸ் ஆஃப் கோவை’ என்ற அமைப்பு சார்பில் நடைபெறும் ‘ஏ3 கான்கிளேவ்’ கருத்தரங்கு நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார். லண்டனில் இருந்து திரும்பிய பிறகு அண்ணாமலை பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சுவாமி விவேகானந்தரின் கோட்பாடான ‘எழுந்திரு, விழித்திரு, உறுதியாயிரு’ என்ற மூன்று கருவை மையமாகக் கொண்டு நடக்கும் இக்கருத்தரங்கில், முதல் நாள் சனாதன தர்மம் குறித்தும், இரண்டாவது நாள் அரசியல் சூழல்கள் குறித்தும், இதில் பங்கேற்கும் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இதில் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, அர்ஜூன மூர்த்தி, அர்ஜூன் சம்பத் உட்பட 27 பேர் கலந்து கொண்டு பேசுகின்றனர். தொடர்ச்சியாக, உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு தேர்தல் உட்பட கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கவனம் செலுத்த இருக்கிறார்.
பாஜக அமைப்பு தேர்தல் முடிவுற்ற பிறகு, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை அண்ணாமலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, மக்களவை தேர்தலையொட்டி, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டதுபோல, சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்துக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.
தொடர்ந்து சட்டப்பேரவை தொகுதி வாரியாகவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற இருக்கிறார். பின்னர், பெருங்கோட்டங்கள் வாரியாக பொதுக்கூட்டங்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதேநேரம், திமுகவை வீழ்த்த புது வியூகம் அமைத்திருப்பதாகவும், இதையொட்டிய அண்ணாமலையின் செயல்பாடுகள் ஜனவரிக்கு பிறகு தீவிரமாக இருக்கும் எனவும் பாஜகவினர் கூறுகின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜக - திமுக இடையிலான போட்டியாக இருக்கும் எனவும், அதை எதிர்கொள்வதற்கான முழுமையான செயல்திட்டங்களை அண்ணாமலை வகுத்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைப்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago