நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளில் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்குவதற்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீஸார் சென்றபோது அவர் அங்கு இல்லை.

இதையடுத்து, கஸ்தூரி தலைமறைவாக இருந்தப்படி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருந்தபோது சென்னை போலீஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் பெண்கள் சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை அவரது வழக்கறிஞர் குழுவினர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரபாகரன் கூறியதாவது: நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு ஐதராபாத்தில் அவர் வீட்டில் இருந்தபோது கைது செய்துள்ளனர். முறையாக வழக்கு விசாரணைக்காக அழைக்காமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி இன்று (நேற்று) எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புழல் சிறையின் கோரன்டைன் வார்டில் அறை எண் 10-ல் நடிகை கஸ்தூரி அடைக்கப்பட்டு உள்ளார். நேற்றிரவு (நேற்று முன்தினம்) அவர் சாப்பிடவில்லை. இன்று முதல் சாப்பிடுகிறார்.

நடிகை கஸ்தூரி நல்ல மன நிலையில் உள்ளார். அவரது மகனுடன் பேச வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். சிறை கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று அவரது மகனுடன் பேச அனுமதி வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தன. ஏற்கெனவே அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு பிணை கிடைத்துள்ள நிலையில், அந்த வழக்குகளை எல்லாம் ஜாமீன் மனுவில் மேற்கோள் காட்டியுள்ளதால் கஸ்தூரி மீதான வழக்கு தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புழல் சிறைக்கு ஒவ்வொரு நாளும் அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக தங்க வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சுமார் 15 பெண் கைதிகள் வந்திருந்தனர். அவர்களுடன் ஹாலில் நடிகை கஸ்தூரி தங்கவைக்கப்பட்டார். பின்னர், வழக்கமான சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிறையில் போதிய தூக்கம் வராமல் அவதிப்பட்டுள்ளார்.

நேற்று காலை உணவை தவிர்த்துள்ளார். சிறைத்துறை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர் மதிய உணவை குறைந்த அளவே சாப்பிட்டுள்ளார். சிறையில் அதிக நேரத்தை புத்தகம் படிப்பதில் செலவு செய்துள்ளாராம். சிறையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்