சென்னை: “நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படக் கூடாது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் எதிர்ப்புநிலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 13 முதல் 19 வரை உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் சார்பில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு நிலை என்பது மிக முக்கியமான விஷயம். கரோனா போன்று உலக அளவில் பாதிப்பைக் ஏற்படுத்தக்கூடியது. முறையற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளின் (ஆண்டிபயாடிக்ஸ்) பயன்பாட்டினால் எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை உண்டாகி அதனால் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளுக்கு எதிரான மருந்துகளின் திறன் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். சாதாரணமாக வைரஸ் காய்ச்சல்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து அவசியமில்லை. பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு மருந்து தேவை.
அதையும் பரிசோதனைக்குப் பின்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் குறிப்பிட்ட நோய் பாதிப்பை தெரிந்துகொள்ளும் முன்னரே நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போக்கு உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தங்கங்களும் மருத்துவமனைகளும் நோய் எதிர்ப்பு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக்கூடாது. நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவை அறிந்து பயன்படுத்தினால் நுண்ணுயிர் எதிர்ப்பு நிலையை தடுக்க முடியும். விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் நோய் தடுப்பு மருந்து பயன்பாடு முறைப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
» செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற முறையில் நடக்கிறதா மகப்பேறு அறுவை சிகிச்சை?
» ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் ஐக்கியம்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, “நுண்ணுயிர் எதிர்ப்பு நிலை என்பது உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இதை தடுப்பதற்கான கொள்கை திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம்,” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, அம்மன்றத்தின் இணை பேராசிரியர் வி.ராமசாமி வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் டி.தேவசேனா அறிமுகவுரை ஆற்றினார். அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி டீன் எஸ்.மீனாட்சி சுந்தரம் வாழ்த்திப் பேசினார். நிறைவாக, மன்றத்தின் அறிவியல் அலுவலர் எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: “நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். சாதாரண சளி காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மாத்திரை போதும். அதற்கெல்லாம் நோய் எதிர்ப்பு மருந்து அவசியமில்லை. உடல்நிலை சரியில்லாத சூழலில் பாக்டீரியா நோய் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட பின்னர் நோய் எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம்.
வெளிநாடுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கும்போது கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த விதிமுறைகள் நம் நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கக்கூடாது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோய் எதிர்ப்பு மருந்து வழங்குவதற்காக ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.
கரோனா காலத்தில் அளவுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டதால் கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டது. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இதயநோய் வருவதாக கூறுவது தவறு. கரோனா தொற்று ஏற்பட்டோருக்கு இதயநோய் , நீரிழிவு போன்றவை வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான் இதற்கு காரணமே தவிர கரோனா தடுப்பூசி அல்ல.” என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை அவர் தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago