பாராலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 21 வது உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கத்தின் தொடர் கல்வித் திட்டம் மற்றும் இந்தியாவின் சிறு விலங்கு பயிற்சியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கருத்தரங்க நிகழ்ச்சியில் பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விளையாட்டுத்துறை, கால்நடை மருத்துவத்துறை என இரண்டிலும் துளசிமதி முருகேசன் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நவ.15 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற 21 வது உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கத்தின் தொடர் கல்வித் திட்டம் (WSAVA -CE) மற்றும் இந்தியாவின் சிறு விலங்கு பயிற்சியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FSAPAI) கருத்தரங்க நிகழ்ச்சியில், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: “இந்த 21-வது உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கத்தின் தொடர் கல்வித் திட்டம் மற்றும் இந்தியாவின் சிறு விலங்கு பயிற்சியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 14-வது தேசிய கருத்தரங்கை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இங்கே பரா பேட்மிண்டன் வீராங்கனை தங்கை துளசிமதியின் சாதனைகளை அனைவரும் போற்றி பாராட்டி உள்ளீர்கள். தங்கை துளசிமதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய திறமையின் மூலம், விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டில் கால்நடை அறிவியல் படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து ஏராளமான பதக்கங்களை குவித்து வருகிறார். சமீபத்தில், தமிழக முதல்வர் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக தங்கை துளசிமதிக்கு உயர் ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தங்கை துளசிமதியை அனைவரும் பாராட்டுவதை பார்க்கும் போது, விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல், அவருடைய உடன்பிறவா அண்ணனாகவும்,, நான் பெருமையும் மகிழ்ச்சியும், அடைகிறேன். அவரை இத்தருணத்தில் வாழ்த்துகின்றேன்.

உலகெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், புதுமைகளைப் பகிர்ந்து கொள்ளவும், சிறிய விலங்கு பராமரிப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த சிம்போசியம் அவசியமான தளமாக உள்ளது. கால்நடை நிபுணர்களாக, உங்கள் பொறுப்பு தனிப்பட்ட சிறு விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதைத் தாண்டி, பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு கல்வி கற்பித்தல், விலங்குகள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்களின் உடல் நலனை பேணுகின்ற பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன். உங்களுடைய தொழில், பெரும்பாலும் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் சவாலானதாகும்.

கால்நடைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் கால்நடைகளுக்கான மாநில சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு வெளியிட்ட சில குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முக்கிய நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்புத் துறையின் ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5 லட்சம் தெரு விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி 1 கோடி ரூபாய் செலவில் 50% மானியத்துடன் போடப்படும். இம்முயற்சி நமது விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெறிநாய்க்கடி பரவுவதைத் தடுப்பதன் மூலம் பொது சுகாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மேலும், 400 கால்நடை மருத்துவர்களுக்கு ரூ.1 கோடி செலவில் விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்கான அறிவிப்பையும் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. கால்நடை மையங்களில் நவீன நோயறிதல் கருவிகளைக் கையாளும் நிபுணத்துவத்தை மருத்துவர்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடை மருத்துவ நிபுணர்களை புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்கின்றோம்.

இந்த முற்போக்கான நடவடிக்கைகள், விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலை உருவாக்குவதற்கான தமிழக அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த கருந்தரங்க நிகழ்ச்சியானது, விலங்குகளின் வாழ்க்கையை வளப்படுத்த அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட உதவும் என்று நான் நம்புகிறேன்.

தங்கை துளசிமதி விளையாட்டுத்துறை, கால்நடை மருத்துவத்துறை என இரண்டிலும் இன்னும் பல உயரங்களைத் தொட நம்முடைய திராவிட மாடல் அரசும், தமிழக முதல்வரும் என்றும் அவருக்கு துணை நிற்பார்கள். அவரது சாதனைகள் தொடரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்