அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: 45,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று முன்தினம் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவர்தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை புறக்கணிப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தர்ணா போராட்டம், ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினரும் அறிவித்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தாக்குதல் சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னையில் அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை, ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் அபுல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டம் அறிவித்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, அந்த சங்கத்தின் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.

மருத்துவர்கள் போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை நேற்று கணிசமாக குறைந்தது. இதனால், மருத்துவ சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரம், பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த 2 நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன.

தலைவர்கள் நலம் விசாரிப்பு: இதற்கிடையே, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மருத்துவர் பாலாஜியை, செல்வப்பெருந்தகை, தமிழிசை சவுந்தரராஜன், பாலகிருஷ்ணன், பிரேமலதா, கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள், மருத்துவ சங்கத்தினர் சந்தித்து நலம் விசாரித்தனர். தான் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே, மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்
பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்