மதுரை: “சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்,” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. சென்னையில் இன்று (நவ.13) பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் அதைத்தான் காட்டுகிறது. இதேபோல், மருத்துவர்களை நோயாளிகளுடன் வருபவர்கள் அடிக்கடி தாக்கிவிடுகின்றனர்.
ஆனால் தற்போது வரை, மருத்துவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி, உடனடியாக தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் சிகிச்சைகள், அவசர மருத்துவ சிகிச்சைகளை தவிர, மற்ற அனைத்து பணிகளையும் புறக்கணித்து மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மருத்துவ மாணவர்களையும் வகுப்புகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் எங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்து, இந்திய மருத்துவக்கழக தலைவருடன் ஆலோசித்து, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை இந்த போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களும் எங்கள் போராட்டத்தில் இணைவார்கள் என்று நம்புகிறோம். அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் புற நோயாளிகள் வருகிறார்கள். உள் நோயாளிகள் 60 ஆயிரம் பேர் வருகிறார்கள்.
» ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்துள்ள சத்யராஜ்
» மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியது யார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
ஆனால், பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு மிக குறைவாகவே உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல்நிலையம் உள்ளது. அதில் பெயரளவுக்கு ஒருசில போலீஸாரே பணிபுரிகிறார்கள். மற்ற போலீஸார் மற்ற சட்டம், ஒழுங்கு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். புறக்காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போலீஸாரும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு நல்ல உடல் தகுதி உடையவராக இருப்பதில்லை.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிகிச்சைப் பிரிவுகளுக்கு போலீஸார் ரோந்து பணிக்கு வருவதே இல்லை. அதனால், இதுபோன்ற கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளன. பலமுறை அரசு கவனத்துக்கு இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை கொண்டு சென்றுவிட்டோம். ஆனாலும், தாக்குதல் சம்பவங்களுக்கு மத்தியில் மருத்துவர்கள், பாதுகாப்பற்ற தன்மையில்தான் பணிபுரிகிறார்கள். மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
புறக்காவல்நிலையம் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் போலீஸார் தினசரி 3 முறை ரோந்து சென்று பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். புறக்காவல் நிலையம் இல்லாத அரசு மருத்துவமனைகளில் அதனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களை போல் இல்லாமல், இந்த முறை மருத்துவர் மீது தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காணாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
நடந்தது என்ன? - சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்தவர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
‘சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தாலும், நன்றாக இருக்கிறார்’ என்றும அவர் கூறினார். | முழுமையாக வாசிக்க > மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியது யார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று முதல்வர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago