கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும்: எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாட்டில் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாட்டில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி உள்ளார்.

மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022-2023-ம் ஆண்டு முதல் 5 ஆண்டு கட்டண ஆணையை அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக, சுமார் ரூ.37 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2023-24-ம் ஆண்டின் செலவுகளுக்கு பிந்தைய வருவாய் ரூ.15,843 கோடி என எதிர்பார்க்கப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட கணிசமான வட்டிச் சுமையால் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் வட்டிச்சுமை சுமார் ரூ.16 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் நிதி நிறுவனங்களான ரூரல் எல்க்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்இசி) மற்றும் பவர் ஃபைனாஸ் கார்ப்பரேஷன் ( பிஎஃப்சி) ஆகியவைகளிடம் இருந்து வாங்கப்பட்ட கடனுக்கு 10.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதை 8 சதவீதமாக குறைக்க வேண்டும்.

பிரதமரின் சூர்யகர் முஃப்த் பிஜ்லி யோஜனா (PM-SURYAGHAR) திட்டத்தின்கீழ், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடக் கடந்த ஜூன் மாதம் மத்திய மின்துறை அமைச்சகம் கூடுதல் நிபந்தனையை அறிமுகப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் இலக்குகள் குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மேலும் புதிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படக் கூடாது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டியிருந்தால், தமிழக அரசின் ஒப்புதலுடன் இலக்குகள் இறுதி செய்ய வேண்டும்.

புதிய துணை மின்நிலையங்களை நிறுவுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் உட்பட மின்கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ரூ.3,246 கோடி மதிப்பிலான திட்ட கருத்துருவுக்கு மத்திய மின்சார அமைச்சகம் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழகத்தில் 2,640 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் உற்பத்தி திட்டங்களும், 520 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீர்மின் சேமிப்பு திட்டமும் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. விரைவில் இயக்கத்துக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு 21,146 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறனுடன் இந்தியாவில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் 6 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்பூங்காக்களை நிறுவ உள்ளது.

ரெய்கர் - புகளூர் - திருச்சூர் 800 கி.வோ. மின்பரிமாற்ற தொடரமைப்பின் கட்டணங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் பகிர மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த கட்டண சுமையை தென்பிராந்திய மின்விநியோக நிறுவனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சமான நடவடிக்கை, தென்மாநிலங்களின் நலனுக்கு உகந்ததல்ல. எனவே, இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் க. நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்