அரசு ஊழியர்கள் - திமுக உறவை பிளவுபடுத்தும் இபிஎஸ் கனவு பலிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு

By கி.கணேஷ்

சென்னை: அரசு ஊழியர்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான வலிமையான உறவில் பிளவு ஏற்படுத்தலாம் என்ற பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: “அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். அவர்களை அதிமுக என்றுமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே திமுக நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர்.

அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு. கடந்த 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார். அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தை ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை பிறப்பித்தார்.

ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. அவர் முதல்வராக இருந்தபோது, தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு “இவ்வளவு சம்பளமா?” என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து “அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?” என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்று, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார், “கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்” என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார்.

“அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்” எனக் காட்டமாகச் சொன்னார்.ஜெயக்குமார் பெயரில் 2019 ஜன.27-ல் விளம்பரம் வெளியிட்டு, `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?’ என கேள்வி எழுப்பியது எல்லாம் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா?

இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை.

இந்த அரசு, அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகல்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதற்கு சாட்சிதான் தொடர்ந்து தேர்தல்களில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் வெற்றிகள். ‘கபட வேடதாரி’ பழனிசாமியையும் அதிமுகவையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்