“கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் திமுகவினர்” - இபிஎஸ் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: “பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக்கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த திமுக-விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் திமுக ஆட்சியாளர்கள்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

“தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க நாங்கள் தயார்” என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்திருந்தன.

இதுகுறித்து, நவ.10ம் தேதியன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியபோது, 42 மாதகால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன்.

என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் PEN என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

கபட நாடகம் ஆடுவதில் Ph.D., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

2021 பொதுத் தேர்தலின்போது திமுக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில்,புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். 20,000 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம வேலை - சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் பணிக் காலத்தில், மேற்படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஊதிய உயர்வு - பணி உயர்வு முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகள் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.

இந்த வாக்குறுதிகளைத் தவிர, சுமார் 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அதிமுக ஆட்சியிலோ, எனது தலைமையிலான அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் ரூ. 4 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டது. மேலும், ஒரு சில சிகிச்சைகளுக்கான உச்சவரம்பு ரூ. 7.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. கோவிட் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. மகளிர் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை, 9 மாதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை அறிவித்தவுடன், அம்மாவின் அரசும் 2017-ஆம் ஆண்டு 7-ஆவது ஊதியக் குழு அமைத்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, 1.10.2017 முதல் பணப் பயனுடன் ஊதிய உயர்வினை வழங்கியது. தொடர்ந்து அகவிலைப்படி உயர்வும், மத்திய அரசு உயர்த்தும்போதெல்லாம் நிலுவையுடன் வழங்கப்பட்டது.

ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக-வோ, பலமுறை அகவிலைப்படி உயர்வை, 6 மாதகால அரியர்ஸ் இல்லாமல் வழங்கியதுதான் அரசு ஊழியர்கள் சந்தித்த வேதனையின் உச்சம். அனைத்திற்கும் மேலாக, எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும். ஆனால்,ஸ்டாலினின் திமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர், மின்சாரத் துறையினர் என பாதிக்கப்பட்ட துறையினர் ஸ்டாலினின் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்த முற்பட்டால் அவர்களை, காவல் துறையை ஏவிவிட்டு கைது செய்து, அவர்களது குரல்வளையை இந்த அரசு எப்படி நெரிக்கிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

ஏன், பிரதான எதிர்க்கட்சியான நாங்களே, எங்களது கட்சி நிறுவனரின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கிதான் நடத்தினோம். தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, மு.க. ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.

பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் (Shadow Government) போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக் கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த திமுக-விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்