‘அமரன்’ எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க முயற்சி: தமிழக பாஜக

By செய்திப்பிரிவு

சென்னை: “அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அதை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த விட்டால் விளைவுகள் மோசமாகிவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்,” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் பாதுகாப்புக்கு, சீருடை அணிந்த நபர்களை நிறுத்தி இருக்கிறார்கள். யாரை பார்க்க வேண்டுமோ அவர்களின் ஒப்புதலை வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பெற்ற உள்ளே அனுமதிக்கிறார்கள். 50 வீடுகள், 100 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கே இந்த அளவுக்கு பாதுகாப்பு தேவை இருக்கும்போது, 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை.

நம்மிடம் இருந்து மத ரீதியாக பிரிந்து சென்ற பாகிஸ்தான், இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களைத் தூண்டி வருகிறது. அதற்கு இங்குள்ள சிலரையே பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியாவின் ஓர் அங்கமான, காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இப்போது நம்மிடம் இருக்கும் காஷ்மீரையும் அபகரிக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க, பனி பிரதேசமான காஷ்மீர் எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். அப்படி காஷ்மீர் எல்லையில் பணியாற்றி, பயங்கரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்தவர்தான் நம் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன். அவரது தியாக வாழ்வையும், காதல் வாழ்க்கையையும் ஒரு கலை படைப்பாக திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கி இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள 'அமரன்' திரைப்படம் தமிழக மக்களின் மனங்களை வென்றுள்ள ஓர் அமர காவியம்.

என்னதான் செல்வச் செழிப்போடு ஒருவர் வாழ்ந்தாலும், அனைத்து வசதிகளும் இருந்தாலும் தேசம் அமைதியாக இல்லாவிட்டால், அகதிகளாக நாடு நாடாக ஓட வேண்டி இருக்கும். நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானிலும், இஸ்ரேல், உக்ரைன் போன்ற நாடுகளில் நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமரன் திரைப்படம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேச பக்தி எந்த அளவுக்கு தேவை என்பதை உணர்த்தி இருக்கிறது. எல்லாவற்றையும் விட தேசமே முக்கியம் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படம் சொல்கிறது மாணவர்களை தேசிய மாணவர் படையான என்சிசியிலும், ராணுவத்திலும் சேர மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.

ஆனால், சில சக்திகள் தேசபக்தியை வலியுறுத்தும், நாட்டுக்காக தனது உயிரையே தியாகம் செய்த ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் திரைப்படத்துக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவரவர் உரிமை. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரானது 'அமரன்' திரைப்படம் என்று சில திரைப்பட இயக்குனர்களே சொல்வது மிகவும் கவலையளிக்கிறது. அமரன் திரைப்படம் காஷ்மீர் பற்றிய திரைப்படம் அல்ல. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு. அதில் அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியாது. இரண்டரை மணி ஓடும் ஒரு திரைப்படத்தில் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்பது முட்டாள் தனம்.

அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்துக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல, காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பவர்களால் மட்டுமே அமரன் திரைப்படத்தை எதிர்க்க முடியும். காஷ்மீர் பிரச்சினை என்பது சிறுபான்மையினர் உரிமை பற்றியது அல்ல. ஏனெனில் காஷ்மீரில் சிறுபான்மையினர் இந்துக்கள் தான். காஷ்மீரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் ராணுவத்துக்கு எதிராகவும் பேசி வருபவர்களை தமிழக காவல்துறை அனுமதிக்க கூடாது. இது தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து விடும். அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அதை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த விட்டால் விளைவுகள் மோசமாகிவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

தேசபக்தியை வலியுறுத்தும், மாணவர்களை தேசிய மாணவர் படையிலும், ராணுவத்திலும் சேர தூண்டும் அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து, இதுபோன்று மேலும் பல படங்கள் வெளிவர ஊக்கமளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அமரன் திரைப்படத்தை திரையிடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்