சென்னை: “தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தானே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல. கரோனா காலத்தில் மருத்துவ உபகரண கொள்முதல் ஊழலில் பெற்ற பணத்தை ஏடிஎம் வாயிலாக பெற்ற பழக்கத்தினால், பாஜக அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் மீது சுமத்த முற்படுகிறதா?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம், கட்சியை பிளவுபடுத்தி நடைபெற்று வருகிற பாஜக கூட்டணி ஆட்சி, வருகிற தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதியான நிலையில் பிரதமர் மோடி கர்நாடக காங்கிரஸ் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டு கூறுகிற அதேநேரத்தில், கர்நாடகத்தில் பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் மீது, கரோனா தொற்று காலத்தில் 2019 ஆம் ஆண்டில் மருத்துவ உபகரண தொகுப்புகள் கொள்முதல் செய்ததில் மெகா ஊழல் நடைபெற்றதாக நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
மருத்துவ உபகரண கொள்முதலில் ஏறத்தாழ, 3,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், குறிப்பாக 12 லட்சம் உபகரணங்கள் வாங்கியதில் ரூபாய் 700 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
» அந்நிய நேரடி முதலீட்டு சட்ட மீறல்: அமேசான், பிளிப்கார்ட் நிர்வாகிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்
சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநில மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் நிறுவனம் 1.2 லட்சம் மருத்துவ உபகரணங்களை தலா ரூபாய் 330 விலைக்கு மார்ச் 2020-ல் கொள்முதல் செய்திருக்கிறது. இந்நிலையில், எடியூரப்பா அரசு கொள்முதல் செய்த உபகரணம் ஒன்றின் விலை ரூபாய் 2,118 என விலை கொடுத்து வாங்கியதில் மெகா ஊழல் நடைபெற்றிருக்கிறது.
அதுமட்டுல்ல, 21 கோடி மருத்துவ உபகரண தொகுப்புகளை கொள்முதல் செய்ய போக்குவரத்து கட்டணம் ரூபாய் 12 கோடி செலவானதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய ஊழல் பின்னணி கொண்ட எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரின் கரோனா தொற்று உபகரண மோசடிகள் குறித்து, அவர்கள் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ? அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கோரியுள்ளதற்கு என்ன பதில் கூறப் போகிறார் ?
கர்நாடக காங்கிரஸ் அரசை நிதி பெறுகிற ஏடிஎம். என்று கூறியிருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக மொத்த நன்கொடையில் 87 சதவிகிதமான ரூபாய் 6060 கோடியை தொழிலதிபர்களிடமிருந்து அமலாக்கத்துறை மூலமாக மிரட்டி தேர்தல் பத்திர நன்கொடை வசூலித்து ஊழலில் ஊறித் திளைத்த ஆட்சியை நடத்தி வருகிற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தானே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல. கரோனா காலத்தில் மருத்துவ உபகரண கொள்முதல் ஊழலில் பெற்ற பணத்தை ஏடிஎம். வாயிலாக பெற்ற பழக்கத்தினால், பாஜக அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் மீது சுமத்த முற்படுகிறதா ?
மேலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார். அம்பேத்கருக்கு காங்கிரஸ் துரோகம் செய்வதாக கூறுகிறார். சட்டமேதை அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக்கி, அரசமைப்புச் சட்டத்தை தயாரிக்கிற வரைவுக் குழுவின் தலைவராக நியமித்து அவரது பங்களிப்பை உறுதி செய்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் உண்டே தவிர, அந்த உரிமை வேறு எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது.
அரசமைப்புச் சட்டத்தை தயாரிப்பதில் அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பை தமது இறுதி உரையில் டாக்டர் அம்பேத்கர் பாராட்டி பேசியதை வரலாற்று ஆவணங்கள் மூலம் நரேந்திர மோடி அறிந்து கொண்டு பேச வேண்டும். இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு கேடயமாக அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என்று சொன்னால் அதை டாக்டர் அம்பேத்கர் மூலமாக செய்த பெருமை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கும், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் உண்டு என்கிற வரலாற்றை பிரதமர் மூடி மறைக்க முடியாது.
எனவே, அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிற சமூக நீதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, உரிய பிரதிநிதித்துவத்தை நோக்கமாகக் கொண்டது தான் சாதிவாரி கணக்கெடுப்பு. கடந்த 2021 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு
உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும். அதனை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி, பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்.
மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற பாஜகவின் அரசியலை எதிர்த்து தான் தேசிய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக, 10,000 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு தம்மை வருத்திக் கொண்ட தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்து, மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago