சென்னை: வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில் 1993-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மழைநீரை சேமிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள், தொழில்துறை கட்டிடங்கள் என அனைத்துக் கட்டிடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், எதிர்பார்த்த பலனில்லாததால், சென்னைப் பெருநகரப் பகுதி நிலத்தடி நீர் ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் தமிழ்நாடு கட்டிடங்கள் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, 2002-ம் ஆண்டு முதல் பழைய கட்டிடங்கள், புதிய கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அத்துடன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டும் போதாது அதை ஆண்டுதோறும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம், சென்னை மாநகராட்சி சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், தண்ணீர் தட்டுப்பாடு வராது, தண்ணீரின் உப்புத் தன்மை குறையும், வெள்ளபெருக்கும் கட்டுப்படுத்தப்படும் என்ற தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வீடுதோறும் வழங்கப்பட்டன. இதுபோல ஆண்டுதோறும் வெவ்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பைப் பராமரிக்க, அதில் உள்ள கூழாங்கல், கருங்கற்களை சுத்தம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், மொட்டை மாடியில் இருந்து வரும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் மணலுடன் சேர்ந்து கட்டியாகிவிடும். அதனால் மழைநீர் நிலத்திற்குள் செல்லாமல், தெருக்களில் வழிந்தோடிவிடும் என மக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாவிட்டாலோ, இருக்கின்ற கட்டமைப்பை சரிவர பராமரிக்காமல் விட்டாலோ சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசு உத்தரவு இருக்கின்ற போதிலும், அதிகாரிகள் ஆய்வின்போது எச்சரித்து நோட்டீஸ் மட்டும் கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசர அவசியம்.
சென்னையில் உள்ள பெரிய கிணறுகள், 215 குளங்கள், குட்டைகள், 56 கோயில் குளங்களில் மழைநீரை சேமிக்கும் கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இன்னமும் லட்சக்கணக்கான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து சென்னையில் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "சென்னைக் குடிநீர் வாரிய கணக்கின்படி 10 லட்சத்து 27 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. இதில் 6 லட்சத்து 80 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 47 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago