மதுரை / சென்னை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்தரராஜன் (66) மதுரையில் நேற்று காலமானார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரை டிவிஎஸ் நகரில் வசித்த இந்திரா சவுந்தரராஜன், சில காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை குளியல் அறையில் வழுக்கி கீழேவிழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி ராதா, மகள்கள் ஐஸ்வர்யா, நிதி உள்ளனர்.
இந்திரா சவுந்தரராஜனின் உடல்,அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உட்பட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்திரா சவுந்தரராஜன் சிறுகதை, நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கான திரைக்கதைகளை எழுதியுள்ளார். ஆன்மிகம் சார்ந்தகதைகளை எழுதுவதில் புகழ்பெற்ற இவர், சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். மொத்தம் 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை எழுதியுள்ளார்.
அதேபோல, சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்புபோன்ற புகழ் பெற்ற கதைகளை எழுதி இருக்கிறார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.
இவர் எழுதிய ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித்துறையின் 1999-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் பிரிவில்3-வது பரிசு பெற்றது. ‘சிருங்காரம்’ என்ற திரைப்படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் சின்னத்திரை விருது இவருக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மர்ம புனைவுக் கதைகள்... இந்திரா சவுந்தரராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்தபுனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சவுந்தரராஜன், நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் பங்காற்றியிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மக்களின் பக்தியையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு தனது படைப்புகளை உண்மைக்கு நெருக்கமாக உருவாக்கி, லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற பெருமைக்குரியவர் இந்திரா சவுந்தரராஜன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இந்திரா சவுந்தரராஜனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் வாசகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜனின் மறைவு, ஆன்மிகம் மற்றும் தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும். அவர்மறைந்தாலும், அவரது படைப்புகள் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை: சிறந்த எழுத்தாளரான இந்திரா சவுந்தரராஜனின் மறைவால் வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago