சென்னை: “சுதந்திரத்துக்குப் பிறகான, இந்தியாவில் 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து, இன்றைய நவீன இந்தியாவை உருவாக்கியதை ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் அதை மறைக்க முடியாது. இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு, ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
வறுமையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மோடி பேசியிருக்கிறார். 1943-ல் ஏற்பட்ட வங்காள பஞ்சத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அலட்சியமான போக்கின் காரணமாக 30 லட்சம் பேர் பசி, பட்டினியால் மடிந்தார்கள். இந்த பின்னணியில் தான் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
» 40 ஆண்டு மருத்துவ சேவையில் ஆதிநாத் அறக்கட்டளை
» பாகிஸ்தான் | குவெட்டா ரயில் நிலைய தற்கொலைப்படை தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு; 46 பேர் காயம்
இந்தியாவில் 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து, இன்றைய நவீன இந்தியாவை உருவாக்கியதை ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் அதை மறைக்க முடியாது. இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் பசி, பட்டினி குறித்து ஐநா மனித வளர்ச்சி குறியீடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகத்தில் உள்ள 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச பட்டினி குறியீடு அறியப்படுகிறது.
நாட்டின் மக்கள் தொகையில் 13.7 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 36.5 பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், இவர்களில் 18.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். மேலும், 2.9 சதவிகித குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறந்து விடுகின்றனர்.
உலக பட்டினி குறியீட்டில் உள்ள நாடுகளில் காங்கோ, சோமாலியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் 105-வது இடத்தில் இந்தியா இருப்பதை விட ஒரு தேசிய அவமானம் வேறு என்ன இருக்க முடியும் ? இதற்கு பதில் கூறாமல் 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறாரே, அதற்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? தொடர்ந்து ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி நவீன கோயபல்சாக பிரதமர் மோடி மாறி வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் நடத்தி விட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி, உறுப்பு 370-ஐ ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துத் தான் போட்டியிட்டது. இதன்மூலம், பிரதமர் மோடியின் அணுகுமுறைக்கு எதிராகத் தான் ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்து புதிய ஆட்சியை அமைத்திருக்கின்றனர்.
ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் மோடி ஆட்சி சாதனை படைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒரு கோடீஸ்வரரை இந்தியா உருவாக்கியிருக்கிறது. 2023-ல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். பணக்காரர்களின் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
1500-க்கும் மேற்பட்ட தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஏழாண்டுக்கு முன்பு இருந்ததை விட இது 150 சதவிகித வளர்ச்சியை காட்டுகிறது. இந்த ஆண்டு ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 1539 ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த பட்டியலில் 220 பேர் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஜூலை 2024-ல், ஹிருன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2020-ல் நான்காவது இடத்தில் இருந்த கவுதம் அதானி, முதன்மை இடத்தை பிடித்துள்ளார். அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூபாய் 10 லட்சத்து 21 ஆயிரத்து 600 கோடி சொத்துகளை அதானி குவித்துள்ளார். முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆக, அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து குவிப்புக்காகத் தான் மோடி ஆட்சி நடத்துகிறாரே தவிர, ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்தோ, பசி, பட்டினியில் உழலும்மக்களை வறுமையிலிருந்து மீட்கவோ உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுத்ததில்லை. இதன்மூலம், மக்கள் நலனில் அக்கறையில்லாத கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதரவு ஆட்சியாகத் தான் மோடி ஆட்சி நடைபெறுகிறது.
மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்து, அதை பிளவுபடுத்தி கபளீகரம் செய்து தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பது தான் ஒட்டுண்ணி செயலே தவிர, கூட்டணி கட்சிகளை சமஉரிமையோடு மதித்து ஜனநாயகப்பூர்வமாக செயல்படுகிற இண்டியா கூட்டணியை பார்த்தோ, காங்கிரஸ் கட்சியைப் பார்த்தோ ஒட்டுண்ணி என்று கூறுவதை நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, காங்கிரஸ் கட்சியின் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைக்க முடியாத பிரதமர் மோடி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ளவது நல்லது.” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago