“கருணாநிதி பெயரில் மாநிலம் முழுவதும்  அவசியமற்ற பணிகள்” - இபிஎஸ் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: “கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதற்கான காரணம் என்ன?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்துக்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டிலான திட்டம் - கைவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் சுமார் ரூ. 235 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் - ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் - ரத்து செய்யப்பட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணை – காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன. காவிரியின் குறுக்கே நஞ்சை-புகளூர் கதவணையுடன் கூடிய தடுப்பணை – காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் - முழுமையாக செயல்படுத்தவில்லை. காவிரி உபரி நீரினை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் - முழுமையாக செயல்படுத்தவில்லை.தலைவாசல் கால்நடைப் பூங்கா - திறக்கப்படவில்லை. தென்காசி - ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை.ரூ. 125 கோடி மதிப்பீட்டிலான மதுராந்தகம் ஏரி தூர் வாரும் பணி - மூன்றாண்டுகளாக பணியில் தொய்வு. இவ்வாறு விவசாயிகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் பயன்படும் பல திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு கிடப்பில் போட்டுள்ளதை அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றினை, பாலாற்றுடன் செய்யாறு வழியாக இணைக்கவும் மற்றும் நந்தன் கால்வாய்க்கு பாசன வசதியை உறுதி செய்யவும், இணைப்புக் கால்வாய் வெட்டும் திட்டத்தினை மேற்கொள்ள சுமார் 320 கோடி ரூபாய் தேவைப்படும் என்ற நிலையில், திராவிட மாடல் திமுக ஆட்சியில் இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வட தமிழகம் குறிப்பாக, விவசாயப் பெருமக்கள் பெருமளவில் பயனடையும் இத்திட்டத்துக்கு, ஸ்டாலினின் திமுக அரசு நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி கிடப்பில் போட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதற்கான காரணம் என்ன? உள்நாட்டு நதிநீர் இணைப்புத் திட்டங்களை, வருகின்ற பத்து ஆண்டுகளில் செயல்படுத்தாவிட்டால், தமிழகத்தில் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்ய ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்