சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. வார கடைசி நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கடந்த வாரத்தில் 400 பேர் பயணம் செய்துள்ளனர்.
வேலைப்பளு, பணிச்சூழல் சார்ந்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட, விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் சாகச பயணத்தையும் விரும்புவோர் மலையேற்றம் செய்கின்றனர். இந்நிலையில், வனத்துறை மலையேற்ற பயண திட்டத்தை 14 மாவட்டங்களில் 40 இடங்களில் செயல்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வன அனுபவக் கழக சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது: வனத்துறையின் வன அனுபவ கழகம் சார்பில் மலையேற்ற திட்டத்தை கடந்த அக்.24-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதன்படி, தற்போது 13 இடங்களில் எளிதான, 16 இடங்களில் மிதமான, 11 இடங்களில் கடினமான பாதைகள் என 40 இடங்களில் மலையேற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மலையேற்றம் செய்ய விரும்பு: வோர் https://www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.599 முதல் ரூ.5,099 வரை வசூலிக்கப்படுகிறது. இதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் உண்டு. 3 கி.மீ. முதல் 20 கி.மீ. தூரம் வரை மலையேற்ற பயணம் இருக்கும். அந்தந்த இடத்துக்கு ஏற்ப 2 மணி முதல் 10 மணி நேரம் வரை மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
மலையேற்றத்துக்கு வருவோரை வழிநடத்தி செல்ல, உள்ளூர் பழங்குடியின இளைஞர்கள் 300 பேருக்கு பயிற்சி அளித்து, சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகு பை, தொப்பி, அடிப்படை முதலுதவி பெட்டி, தண்ணீர் குடுவை, வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில், திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 15 பெண் வழிகாட்டிகளும் உள்ளனர்.
மலையேற்றத்துக்கான முன்பதிவை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மேற்கொள்ளலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எளிதான மலையேற்ற பாதைகளில் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டத்தை தொடங்கி, கடந்த நவம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் மட்டுமே மலையேற்றம் செயல்படுத்தப்பட்டது. அதில் சுமார் 400 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் குடியம் குகைகள், கோவை மாவட்டம் பர்லியார், சேலம் மாவட்டம் சன்னியாசி மலை உள்ளிட்ட 4 எளிதான இடங்களில் மக்கள் அதிக அளவில் மலையேற்றம் செய்துள்ளனர். அடுத்த வார மலையேற்ற பயணத்துக்கு இப்போதே 100 பேருக்குமேல் முன்பதிவு செய்துள்ளனர்.
மலையேற்றத்துக்கு முன்பதிவு செய்வோர், அவரவர் உடல் வலிமைக்கு ஏற்ப தடத்தை தேர்வு செய்ய வேண்டும். உள்ளூர் வானிலை நிலவரம் அறிந்து அதற்கேற்ற உடையில் வர வேண்டும். போதுமான குடிநீர், நொறுக்கு தீனி, தேவையான மருந்துகளை பையில் வைத்திருக்க வேண்டும். மலையேற்ற பயணத்தில் தாவரங்கள், பூக்களை பறிக்க கூடாது. வன விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது. மலையேற்றத்துக்கு வருவோருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. அவர்களுக்கு துணிப்பை, தொப்பி, பேனா, பறவைகள் குறித்த கையேடு ஆகியவை வழங்கப்படுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago